கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில் ஊருக்கு வந்த அந்த மாணவி கடந்த 9-ம் தேதி மீண்டும் கல்லூரிக்கு செல்வதற்காக சிராயன்குழி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆம்னி பஸ்சில் கிருஷ்ணகிரி சென்றார். மகள் கல்லூரிக்கு சென்றதை உறுதி செய்வதற்காக மகளின் செல்போனை பெற்றோர்கள் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கல்லூரியை தொடர்பு கொண்டு விசாரித்த போது மகள் கல்லூரிக்கு செல்லவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து அந்த மாணவியின் தாய் தக்கலை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாணவி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த மாணவியின் செல்போன் இரண்டு தினங்களுக்கு முன் ஆன் செய்யப்பட்டது. அந்த செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்த போது மாணவி கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கிருஷ்ணகிரி சென்ற போலீஸார் மாணவியை அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து அவரை அழைத்து கொண்டு தக்கலை காவல் நிலையம் வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து மாணவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் தக்கலை பஸ்நிலையத்தின் பின்புறமுள்ள ராமன் பறம்பு பகுதியை சேர்ந்த அஜ்மல் (வயது-21) என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஏற்கனவே அந்த கல்லூரி மாணவியோடு அஜ்மலுக்கு பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக மாணவி கிருஷ்ணகிரிக்கு செல்வதை அறிந்த அஜ்மல் மாணவி சென்ற அதே பஸ்ஸில் கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். மாணவியுடன் கிருஷ்ணகிரியில் இறங்கிய வாலிபர், அவரை கல்லூரிக்கு செல்லவிடாமல், தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். மாணவிக்கு அந்த வாலிபருடன் ஏற்கனவே பழக்கம் இருந்ததால் பல்வேறு இடங்களில் இருவரும் சுற்றியுள்ளனர்.