Ro Khanna: அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியின் குரல்… மீண்டும் வெற்றி பெற்ற ரோ கன்னா! | Who Is Ro Khanna? Indian-American Lawmaker in the US Congress

Spread the love

சிலிக்கான் வேலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ரோ கண்ணா (Ro Khanna), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் துறை, வேலைவாய்ப்பு, வெளியுறவுக் கொள்கை எனப் பல்வேறு விவகாரங்களில் தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

மீண்டும் வெற்றி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் 17-வது நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோ கண்ணா, நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். குடியரசுக் கட்சி வேட்பாளர் ரிதேஷ் டண்டனைத் (Ritesh Tandon) தோற்கடித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது அடுத்த பதவிக்காலத்தை உறுதி செய்துள்ளார்.

இந்தியக் குடும்பப் பின்னணியும் கல்வியும்

1976-ம் ஆண்டு பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியாவில் பிறந்தவர் ரோ கண்ணா. இவரது பெற்றோர் பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தந்தை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) பொறியியல் படித்தவர்; தாய் சிறப்புக் கல்விப் பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற ரோ கண்ணா, பின்னர் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.

ஒபாமா ஆட்சியில் பணி முதல் மக்கள் பிரதிநிதி வரை…

அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் ஆர்வம் கொண்ட இவர், பராக் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்க வர்த்தகத் துறையின் துணைச் செயலராகப் பணியாற்றினார். அந்தப் பொறுப்பில் சர்வதேச வர்த்தக உறவுகள், அமெரிக்க நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தினார்.

பின்னர் கல்வித்துறையிலும் பணியாற்றினார். 2004 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர், சளையாது முயற்சி செய்து 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழில்நுட்பமும் வெளியுறவுக் கொள்கையும்

சிலிக்கான் வேலி அமெரிக்காவின் முக்கியத் தொழில்நுட்ப மையமாக இருப்பதால், அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தித் துறை வளர்ச்சி ஆகியவை அவரது அரசியல் பணிகளில் முக்கிய இடம் பெறுகின்றன. அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “எண்ட்லெஸ் ஃபெரன்ட்டியர்’ (Endless Frontier Act) சட்ட முன்மொழிவை இவர் அறிமுகப்படுத்தினார். இந்தச் சட்ட முன்மொழிவே பின்னர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘சிப்ஸ் அண்ட் சயின்ஸ்’ (CHIPS and Science Act) சட்டம் உருவாவதற்கான அடிப்படைகளில் ஒன்றாக அமைந்தது.

வெளியுறவுக் கொள்கையிலும் ராணுவ நடவடிக்கைகளைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இந்திய வம்சாவளிப் பின்னணியிலிருந்து வந்து அமெரிக்க அரசியலின் உயர் பொறுப்பில் இருக்கும் ரோ கண்ணா, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த முக்கிய விவாதங்களில் முதன்மையான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *