Tamilnadu
oi-Vishnupriya R
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூரில் இருந்து வருகை தந்த விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே இன்று ஆஜராகுமாறு எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, அவரது வீட்டிற்கே சென்று சம்மன் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினமே தனது விசாரணையை சிருஷ்டி சிங் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு பிடி இருகுகிறது. எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் அவரிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி சம்மன் அனுப்பியிருந்தார்.
கச்சிராயப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சம்மன் அளித்திருந்தார்.இந்த நிலையில் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற அவரிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டன.

இன்று சம்மன் அனுப்பியுள்ளதால் அருள் விக்னேஷிடம் இன்றே விசாரணை நடத்த சிருஷ்டி சிங் திட்டமிட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி எஸ்பி ஷக்னாஸ், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உள்ளிட்டோருடன் சிருஷ்டி சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். அருள் விக்னேஷ் இன்று ஆஜரானால் அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகள் தெரியவரும்.
ஏற்கெனவே எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்யக் கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இன்று அவர் கைது செய்யப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.