7 கோபுரங்கள், 7 பிராகாரங்கள், 7 கிணறுகளுடன், 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசிகளுக்கான மகாமண்டபத் தூண்கள் எனச் சுமார் 20 ஏக்கர் பரப்பில் ஆலயம் திகழ்கிறது. இங்குள்ள அம்பிகை, சுந்தரகுஜாம்பிகை. இவள், அகத்தியருக்கு அருள் செய்து சங்கீத கலையை அருளியவள். மங்கல வரங்களை அருள்வதால் இவளிடம் திருமண வரம், பிள்ளை வரம் வேண்டி வேண்டிக்கொள்வர்.
கொல்லூருக்கு அடுத்து இங்குள்ள மூகாம்பிகை விஷேசமானவள். மூகாசுரனை அழித்ததால் உண்டான தோஷம் நீங்க இங்கு வந்து நிவர்த்தி பெற்றாள் மூகாம்பிகை. மகிஷாசூரனை மிதித்தபடி நிற்கும் துர்கையின் திருக்கோலம் இங்கு விஷேசமானது.
ஆண்ட விநாயகர் என்பது இங்குள்ள விநாயகர் திருநாமம். இவரை வணங்க ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மருத மரத்தடியில் சுயம்புவாகத் தோன்றிய மகாலிங்கேஸ்வரர் தன்னைத் தானே பூஜித்து, பிறகு சப்த ரிஷிகளுக்கும் சிவ பூஜை விதிகளைப் பயிற்றுவித்த தலம் என்பதால் இது குரு வடிவத் தலமாகவும் இருந்து, பூஜிப்பவர்களுக்கு ஞானத்தையும் அருளுகிறது.

பூச நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவது சிறப்பு. அதேபோல் அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. எல்லா பூஜைகளும் முதலில் கணபதிக்கு என்பதுதானே வழக்கம். இங்கு மட்டுமே ஈசனுக்கு அடுத்துதான் விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. பிரணவப் பிராகாரத்தில் உள்ள சாம்பவி தட்சிணாமூர்த்தி, ராஜ அலங்காரத்தில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் செல்வாக்கு, சொல்வாக்கில் சிறக்கலாம் என்பது ஐதிகம்.
தஞ்சை அரசன் பிரதாப சிம்மன் ஆட்சியை இழந்து தவிக்க, அவன் காதலி அம்முனு, இங்கு வந்து லட்ச தீபம் ஏற்றி, தன் உருவில் ஒரு பெரிய பாவை விளக்கு உருவாக்கி இந்த ஆலயத்துக்கு அளித்தாள். அதனால் இழந்துபோன அரச வாழ்வை அடைந்தான் என்கிறது தலவரலாறு.
எனவே கடன், நோய், வழக்கு, பிரச்னை, தோல்வி, நஷ்டம் எல்லாவற்றுக்குமே தீர்வு அளிப்பவர் இந்த மகாலிங்கேஸ்வரர் என்பது மக்களின் நம்பிக்கை. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை இவர் வீற்றிருக்கும் ஊருக்கே சென்று தரிசித்துவிட்டால், வாழ்க்கை வளமாகும். நலமாகும்.