’காடுகள் பாதுகாப்பை தனியாரிடம் ஒப்படைப்பதா?’– தவெக அரசின் முடிவுக்கு சூழலியல் அமைப்புகள் எதிர்ப்பு!

Spread the love

ஓசை மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஆகிய சூழலியல் அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “தமிழ்நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உயிரியல் பன்மயமிக்க பகுதியான முதுமலை புலிகள் காப்பகத்தில், காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்புப் பணிகளை, வரும் டிசம்பர் மாதம் முதல் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மேற்கொள்ள அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை வனத்துறை கோரியுள்ளது. இதன்படி மசினகுடி கோட்டத்தில் 134 பணியாளர்களும், உதகை கோட்டத்தில் 159 பணியாளர்களும் என 293 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இப்பணியாளர்களில் 221 பேர் காடு, புலி, வரையாடு உள்ளிட்டவற்றின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதில் 99 பேர் வேட்டைத் தடுப்புக் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வேட்டைத்தடுப்பு காவலர்கள் வேட்டைத் தடுத்தல் , மரம் வெட்டுவதைத் தடுத்தல் , தீ தடுத்தல், கஞ்சா பயிரிடுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல், மரக்கன்றுகள் நடுதல் என பல பணிகளை செய்ய வேண்டும். வேட்டை அச்சுறுத்தல் உள்ள இடங்களில் காட்டைப் பாதுகாப்பது எளிதானதல்ல. பெரும்பாலும் அக்காட்டை அறிந்த பழங்குடி மக்களும் உள்ளூர் மக்களுமே அப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது அவர்களின் துணையால்தான் காட்டின் பாதுகாப்பு சாத்தியமாகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள நிரந்தர பணியாளர்களால் அப்பணியை செய்து விட முடியாது.

காடு
காடு

கணிசமான எண்ணிக்கையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இருந்தால் மட்டுமே அப்பணி சாத்தியமாகும். எனவே காடு, காட்டுயிர் மேலாண்மையில் வேட்டைத் தடுப்பு காவலர்களின் பங்களிப்பு மிக அவசியத் தேவையாகிறது.  ஆனால், அவர்களுக்கு ரூ.15,625 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால் தாங்கள் நிரந்தரமாக்கப்படுவோம் என்கிற ஒற்றை நம்பிக்கைதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். பல இடங்களில் இன்னும் கூடுதலாக அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், தற்போது வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தனியார் மூலமாக ஒப்பந்த அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என த.வெ.க. அரசு முடிவெடுத்திருப்பது காட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். கடந்த ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்ட இத்தவறான முடிவை இப்போது ஆட்சியில் உள்ளவர்களும் தொடர்வது வருத்தம் அளிக்கிறது.

தனியார் மூலம் ஊதியம் வழங்கப்படும் சூழலில் பணி அமர்த்தப்படுபவர்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருப்பார்கள் என்று கூற முடியாது. கள்ள வேட்டை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கிடைக்கும் ரகசிய தகவல்கள் தனியாரால் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் கசிந்து குற்றவாளிகள் தப்பிப்பதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது. பல்வேறு வகையில் காடு, காட்டுயிர்களின் பாதுகாப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் இம்முடிவினை அரசு உடனடியாக கைவிட வேண்டும். வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மாதம் ரூபாய் 20,000 ஆக உயர்த்த வேண்டும். வேட்டைத் தடுப்பு உள்ளிட்ட காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்புப் பணிகளுக்குக் குறைந்தது 50% உள்ளூர் பழங்குடிகள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வனத்துறையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கை நிலைமையை ஆராய்ந்து அதை முன்னேற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *