வேலூர் மாவட்டத்தில், பெருநகரையும் பின்தங்கிய கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதி காட்பாடி. இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன். கட்சியின் சீனியரான இவர், 1971-லிருந்து 2021 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், காட்பாடியில் எட்டு முறையும், ராணிப்பேட்டையில் இரு முறையும் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தடுமாறி வெற்றிபெற்றார் துரைமுருகன். அப்போது அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட வி.ராமுவே, இந்த முறையும் துரைமுருகனுக்குச் சவால் விடுக்கும் விதமாகக் களமிறங்கியதால், காட்பாடி களம் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக டாக்டர் சுதாகர், நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருக்குமரன் ஆகியோரும் பிரசாரக் களத்தில் தீவிரம் காட்டினார்கள்.

இந்த நிலையில், இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுக்கான வாக்கு எண்ணிக்கையில் துரைமுருகன் தொடர்ந்து பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். முதல் சுற்றிலேயே அ.தி.மு.க வேட்பாளர் வி.ராமு 3,831 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். துரைமுருகன் 2,657 வாக்குகளும், த.வெ.க வேட்பாளர் சுதாகர் 2,453 வாக்குகளும் பெற்றார்கள். மதியம் 12.30 நிலவரப்படி, 5-வது சுற்று முடிவிலும் அ.தி.மு.க-வே முன்னிலை வகிக்கிறது. அ.தி.மு.க-வின் ராமு 19,514 வாக்குகளும், தி.மு.க-வின் துரைமுருகன் 13,694 வாக்குகளும், த.வெ.க-வின் சுதாகர் 12,866 வாக்குகளும் பெற்றிருந்தார்கள்.
எனவே, துரைமுருகனை விட 5,820 வாக்குகள் கூடுதலாக பெற்று வி.ராமு வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். 1996-ல் இருந்து தற்போதுவரை காட்பாடி தொகுதியை `தொடர்ந்து’ தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் துரைமுருகன். அதற்கு முந்தைய 1991 தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இப்போது களம் அவருக்குச் சாதகமாக தெரியவில்லை. ஒருவேளை அ.தி.மு.க வெற்றிபெற்றால், காட்பாடி தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலை மலரும். தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், தேர்தல் முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்!