கால நதியில் ஒரு பயணம்: பொன்னியின் செல்வன் சுவடுகளில் 'பழையாறை' வரை!

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

வலது புறம் வடவாறு உடன் வந்து கொண்டிருந்தது. இந்த ஆற்றில் இருந்து தான் வீராணம் ஏரிக்கு நீர் போய் சேருகிறது. அங்கேயிருந்து சென்னை மாநகருக்கு தாகம் தீர்க்க வரும் வாராது வந்த மாமணி. ஒரு நன்றியுணர்ச்சியுடன் மனம் நெகிழ வடவாற்றுடன் சென்று கொண்டிருந்தோம். ஆள் அரவமற்ற மிகவும் சிறிய ஆற்றங்கரையோர மண் சாலை. கரையோரம் அடர்ந்த மரங்கள் பகலையும் இருட்டென அடித்திருந்தது.

திருப்புறம்பியம்

பதினொரு கிலோமீட்டர் நீள சாலை. ஒருவித அமானுஷ்யமான நிஷப்தம் சூழ்நிலையை இன்னும் கலவரமாக்கியது. நாங்களோ நான்கு பேர் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஆனால் பாவம் இதில் தானே ஆழ்வார்க்கடியான் தனியாளாக பயணித்திருப்பான். எவ்வளவு வம்பு பேசுவான்! எத்தனை பேரை வீண் வம்புக்கு இழுப்பான்! இப்போது பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் செல்கிறான். அவன் நிலையை எண்ணி மனதிற்குள் சிறு சிரிப்பு வரத் தான் செய்தது.  

நாங்கள் பயணித்தது டிசம்பர் மாதமாதலால், இதமான  வெய்யிலும் மிதமான குளிருமான நல்ல அருமையான பருவநிலை. மழை பெய்து விட்டிருப்பதினால் மண் குளிர்ந்திருந்தது. ஆற்றில் சலசலவென நீர் ஓடிக் கொண்டிருப்பதால் காற்றும் குளிர்ந்திருந்தது.  

அடுத்ததாக, காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் ஓடும் மண்ணாற்றின் வடகரையில் இருக்கும் திருப்புறம்பியம், அதாவது கல்கியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் உலக சரித்திரம் அறிந்தவர்கள், சரித்திரத்தின் போக்கை மாற்றியதாக சொல்லப்பட்ட வாட்டர்லூ பானிபட் பிளாசிக் சண்டைகளைப் போன்றே திருப்புறம்பியம் என்ற இந்த இடத்தில் நடந்த சண்டையும் சோழர்களின் சரித்திரத்தை மாற்றியது.

அதாவது ராஜராஜ சோழனின் தாத்தாவிற்கு தாத்தா விஜயாலய சோழன் குறுநில மன்னனாக ஆண்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் வரகுணவர்ம பாண்டியனுக்கும் அபராஜித பல்லவனுக்கும்  நடக்கும் சண்டைகள் எல்லாமே சோழ நாட்டில் தான் நடக்கும். அதுபோல ஒரு போரில் பல்லவனுக்கு ஆதரவாக கங்க மன்னன் பிரதீவிபதியுடன் விஜயலாயனின் மகன் ஆதித்தன் கலந்து கொண்டான். பாண்டியன் வெற்றி பெற்றால் சோழர் சர்வ நாசமாகிப் போவர். உடல்நலம் குன்றிய கிழ சிங்கம் விஜயாலயனின் கடைசி நேர வீரத்தினால் இறுதியில் பல்லவன் வெற்றிப் பெற்ற இடம் இது. 

திருப்புறம்பியம் சாட்சிநாதர்

அங்கேயே மடிந்து போன கங்க மன்னனுக்கு இங்கே ஒரு பள்ளிப்படை இருக்கிறது. இப்போது அது அய்யனார் கோயில் எனப்படுகிறது. கோயில் சிதிலமடைந்திருக்கிறது. கோயிலின் முன்பு வேலும் சூலமும் குத்தி அந்த இடமே ஒரு அமானுஷ்யமாக இருந்தது. பகல் பொழுதிலே கூட அந்த இடம் கொஞ்சம் இருட்டாக அச்சம் தட்டுவதைப் போல இருக்கவே சட்டென்று அங்கேயிருந்து நகர்ந்து விட்டோம்.

பழந்தமிழ் நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு வைத்து படையலிட்டு வழிப்படுவது என்பது நடுகல் என்பர். அதையே கல்லின் மீது ஒரு கோயில் கட்டப்பட்டிருந்தால் அது நடுகற் கோயில் என்று அழைப்பர். அதுவே அரசர்கள் போரில் இறந்தால் அவர்களை புதைத்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை நட்டு ஒரு கோயிலை எழுப்பி அதற்கு பள்ளிப்படை கோயில் என்பார்கள்.  

நாங்கள் போன போது மாலை மணி ஐந்தரை. சாதாரண கிராமத்து மண்சாலை. சாலையின் இருபுறமும் பச்சைபசேல் என்று விளைந்து நிற்கும் நெற்பயிர்கள். பாலைப் பிடித்திருந்த நெற்கதிரின் வாசமும், கிராமத்து மண்சாலையில் தூறல் விழுந்ததினால் உண்டான மண் வாசமும், சாணி வாசம், ஆட்டாம்புழுக்கை வாசனை என்று மொத்தமும் கிராமத்தின் மண் வாசனை காற்றில் பரவியிருந்தது.

மூக்கை விரித்து காற்றை இழுத்து நெஞ்சை நிரப்பிக் கொண்டேன். அப்பா..! மாசு மருவில்லாத காற்று. மாலையும் இரவும் சந்திக்கப் போகும் அந்திப் பொழுது. இளம் வெளிச்சம். பகலெல்லாம் இரையெடுக்க சென்றிருந்த பறவைகள் திரும்ப தங்கள் இடத்திற்கு வந்து அடையும் கண் கொள்ளாக் காட்சி. பட்சிகளின் ஒலி அந்த அமைதியான பிரதேசத்தில் மிகுந்த சப்தமாகவே ஒலித்தது.

சிவன் சாட்சிநாதேஸ்வர் என்று கோயில் கொண்டிருக்கிறார். கோயிலும் கற்றளியாக பரந்து விரிந்து கிடக்கிறது. மதில் சுவர்கள் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.   

தரிசனம் முடிந்து பிரகாரம் சுற்றி விட்டு, கொடிமரத்தின் அடியில் விழுந்து தெண்டனிட்டு விட்டு சற்று நேரம் அமர்ந்தோம். சட்டென்று இருட்டத் தொடங்கிய நேரம். வானம் நிர்மலமாக இருந்தது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண் சிமிட்ட தொடங்கியிருந்தது. சாயரட்சை பூஜைக்கான காண்டாமணி டாண் டாண் என்று ஓங்கி ஒலித்தது. கோயிலுக்குள் எண்ணி பத்தி பத்து பேர் தான் இருந்திருப்போம். ஆளற்ற அமைதியான அந்த இடத்தில் மணியோசை தெய்வீக உணர்வை எழுப்பி சிலிர்க்க வைத்தது. எத்தனை வருடங்கள் ஆகிறது இதுப்போல சாயரட்சை மணியோசைக் கேட்டு. இவ்வளவு அமைதியும் எத்தனை விலை கொடுத்தாலும் கிடைத்திடுமா!

கூகுள் அக்காவின் வழிகாட்டுதலின் படி மண்ணாற்றங்கரையின் இடது புறம் பயணித்தோம். பௌர்ணமி முடிந்து சில நாட்கள் ஆகி விட்டிருந்ததினால் நிலா இன்னும் வரவில்லை. மணி பின்மாலை ஏழுதானிருக்கும். அதற்குள் லேசான இருட்டானது கும்மிருட்டாகி விட்டிருந்தது. அக்கம்பக்கம் வீடுகளோ வெளிச்சமோ சுத்தமாக இல்லை. சலசலவென ஓடிக் கொண்டிருந்த மண்ணாறு, நந்தினியைப் போன்று அழகாக இருந்தாலும் அவளைப் போன்றே ஆபத்தானதாகவும் இருந்தது.  என்ன செய்வது? அழகிருக்கும் இடத்தில் தானே ஆபத்தும் இருப்பது. இயற்கையின் படைப்பே அப்படித் தானே.!

திருவையாறு கோயில்!

ஒரே ஒரு ரெட்டை மாட்டு வண்டி மட்டுமே பயணிக்க இயலும் சாலை. சற்றே தடுமாறினாலும் மண்ணாறு தான் அடைக்கலம். இருட்டு. ஆளில்லாத பிரதேசம். பேச்சு மூச்சில்லாமல் அமைதியாகவே பயணித்தோம். பதினாறு கிலோமீட்டர் பயணம் பிரதான சாலைக்கு வண்டி வந்த பின்பு தான் மூச்சே வந்தது.

கங்க மன்னனின் பள்ளிப்படை காடாக இருந்தது. ரவிதாசன் அவன் அண்ணன் சோமன் கடம்பூர் மாளிகையின் காவல்காரன் இடும்பன்காரி மற்றும் சிலர் இங்கே கூடித் தான் ஆதித்தனையும் அருண்மொழியையும் ஒரே நேரத்தில் கொன்று விட திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களுக்கு சோழர்களின் தனாதிகாரியான பெரிய பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி தேவி தான் தங்க காசுகள் கொடுத்து உதவுகிறாள். நந்தினியை தங்களிடமிருந்து பிரித்துக் கொண்டு போக திட்டமிடும் ஆழ்வார்க்கடியானை எங்கே கண்டாலும் கொன்று  விட வேண்டும் என்று ஆணையிடுகிறான் ரவிதாசன்.

இதை அறிந்து  திடுக்கிட்ட ஆழ்வார்கடியான் அங்கே இருந்து தப்பி ஓடுகிறான். அவனை விட்டு விடுவோம். அவன் சாமர்த்தியசாலி. பிழைத்துக் கொள்வான். அவனுக்கு நம் உதவி தேவையில்லை. மேலும் அவனுக்கு அநேக வேலைகள் இருக்கிறது. இன்னும் செம்பியன் மாதேவியை சந்திக்க வேண்டும். நந்தினியை பார்க்க வேண்டும். இறுதியில் ராமேஸ்வரத்தில் அநிருத்த பிரும்மராயரை சந்திக்க வேண்டும்.  

ஆகையினால் அவனை அவன் போக்கில் விட்டு விட்டு நாம் வந்தியத்தேவன் பின்னால் திருவையாறு செல்வோம்.

கும்பகோணம்

கடம்பூரில் இருந்து வந்தியத்தேவன் சென்றது குடந்தை என்னும் கும்பகோணம். அங்கே தான் அருண்மொழியை அரசனாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் குந்தவியை சந்திக்கிறான். காதல் கொள்கிறான். பிற்காலத்தில் மணக்கிறான். 

மகாமக குளத்தின் மேற்கரையின் படித்துறையில் இன்றைக்கும் ஒரு சிலை காணக் கிடைக்கிறது. ஒரு வீரன் தன் இடது கையால் தன்னுடைய தலைமுடியை பிடித்துக் கொண்டு வலது கையால் தன் தலையை கொய்து கொள்கிறான்.   

கும்பகோணம் மகாமக குளம்

இந்த வீரன் வேளக்காரப் படையை சார்ந்தவன். இவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் போரில் அரசரை காப்பாற்றுபவர்கள். அப்படி காப்பாற்ற முடியாமல் போனால் தங்கள் தலையை தாங்களே அறுத்துக் கொண்டு விடுவார்கள். போருக்குப் புறப்படும் முன்பு தங்களில் யாராவது ஒருவன் தன்னைத் தானே பலியிட்டுக் கொள்வதும் உண்டு.  இத்தகைய கொடூர சபதமெடுத்துக் கொண்டுள்ளவர்களுக்கு அதிக சலுகைகள் உண்டு. தமிழ்க்கடவுள் முருகனுக்கும் வேளக்காரன் என்னும் பெயர் உண்டு.

திருவையாறு 

“கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுகையார் முகத்தினின்று சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடும் திருவையாறே”- திருஞான சம்பந்தர்.

இங்கே தான் வந்தியத்தேவன் நந்தினியை சந்திக்கின்றான். ஆசிரியர் கல்கி நந்தினியின் அழகை அப்படி வர்ணித்திருப்பார். இறுதியில் நாகப்பாம்பைப் போன்ற அழகு என்று முடித்திருப்பார். உண்மை தானே! ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் வருங்கால மன்னனான ஆதித்த கரிகாலனை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்தவள் அல்லவா!

நாங்கள் திருவையாறு அய்யாரப்பன் கோயிலுக்கு சென்றோம். இங்கு தான் நந்திகேஸ்வரர் பெட்டியில் கிடைத்ததாக வரலாறு. நந்திகேஸ்வரர் என்ற பட்டமும் இங்கே தான் அவருக்கு கொடுக்கப்படுகிறது.

திருவையாறு தேரோட்டம்

இந்த கோயிலில் திருவோடு மரம் இருந்தது. திருவோடு என்பது ஒருவித காய். பெரிய அளவில் இருந்தது. இது காய்ந்ததும் அதை உடைத்து திருவோடாக செய்து கொள்கிறார்கள் என்றனர் அங்கிருந்தவர்கள்.

பிற்காலத்தில் தியாகராஜா சுவாமிகள் இங்கே பிறந்து இசையின் மூலமாக பக்தி மார்க்கத்தில் சிறந்து விளங்கியது நாம் அறிந்ததே. அவர் எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்த இடத்தில் சற்று நேரம் நாங்களும் அமர்ந்திருந்தோம். அருமையான அனுபவம். அரக்க பறக்க ஓடாமல் நின்று நிதானித்து அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் இவை.

தஞ்சாவூர். 

வந்தியத்தேவன் போன போது கோட்டை வாயில் பரபரவென இருந்தது. வேளக்காரப் படையினர் ஆரவாரத்துடன் உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தனர். மக்கள் அவர்களுக்கு பயந்து சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் பெரிய கூச்சலோடும் வாழ்தொலிகலோடும் வெளியே வருவார்கள். அப்போது தான் தன்னருகில் நின்று கொண்டிருக்கும்  சேந்தன் அமுதனை சந்திக்கின்றான். 

சேந்தன் அமுதன் பூ கொண்டு போகும் தளி குளத்தார் கோயில் இப்போது பெரிய கோயிலின் அருகில் இருக்கும் சிவகங்கை பூங்காவில் உள்ள குளத்தில் ஒரு திட்டாக, காலம் கடந்தும்  நின்று கொண்டிருக்கிறது. வின்ச்சில் போகலாம். ஆனால் திட்டில் இறங்கி நிற்க முடியாது. அங்கே ஒரே ஒரு சிவலிங்கம் இருக்கிறது.  

இந்த குளத்தில் எப்போதும் நீர் நிரம்பியிருக்குமாம். ஏனெனில் பெரிய கோவிலில் விழும் மழைநீர் அங்கேயிருந்து இந்த குளத்தில் விழும் வண்ணம் மழைநீர் சேகரிப்பு செய்திருக்கிறார்கள் சோழர்கள். இங்கே நிரம்பிய நீர் மிகுதியானால் அங்கேயிருந்து இன்னும் ஐந்து குளத்திற்கு, அதாவது சாமந்தான் குளம், அய்யங்குளம், அழகிக்குளம் போன்றவற்றிருக்கு பூமிக்குள் நீர்பாதை அமைக்கப்பட்டு   கொண்டு சென்றிருக்கின்றார் ராஜராஜ சோழன்.  என்னவொரு நீர் மேலாண்மை செய்திருக்கிறார்கள் பெருமைக்குரிய சோழர்கள். என்னே ஞானம்! 

பெரிய கோவில் பொன்னியின் செல்வனில் இல்லை. எனினும் இன்றும் உலக அதிசயமாக உயர்ந்து நிற்கும் கோவிலை மாலை வேளையில் பார்ப்பது ஒரு கண் கொள்ளாக் காட்சி. மேற்கே மறையும் சூரியக்கதிர்கள் கோபுரத்தின் உச்சியை தங்கமாக ஜொலிக்க வைத்திருக்கும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும்.

விஜயாலய சோழன் தஞ்சையை தலைநகராக கொள்ளும் போதே அங்கே நிசும்ப சூதனி கோவிலை கட்டிவித்தான். அது இப்போது வடபத்ரகாளியம்மன் என்னும் பெயரில் குடியிருப்புகளின் மத்தியில் சிறியதாக நின்று கொண்டிருக்கிறது. அம்மனின் சிலை அத்தனை ஒரு அழகு. கருகருவென கருப்பு நிற மேனியில் செவ செவென ஜொலிக்கும் கண்களுடன் தலையை சாய்த்து நிசும்பனைக் கொல்லும் அம்மன் சிலை அத்தனை ஒரு தத்ரூபம். 

இந்த கோயிலைக் கண்டுப்பிடிக்கத் தான் கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக அங்கே சுற்றி வந்து கொண்டிருந்தோம். வடபத்ரகாளியாம்மன் என்னும் பெயரில் இருப்பதை அறியாமல்.

பொன்னியின் செல்வனில் வரும் சிங்களத்து ஊமைப்பெண்ணிற்கு கோவில் உண்டு. சிங்கள நாச்சியர் கோவில் என்று. அதை தேடிக் கண்டுப் பிடிக்க வேண்டும். கூகிளில் காணக் கிடைக்கும் சிங்கள நாச்சியர் கோயில் என்பது வேறு. அது கண்டியில் இருந்து வந்த கடைசி தமிழ் மன்னனின் மனைவியின் பெயரில் சரபோஜி மகராஜா கட்டியது. அதை இப்போது செங்கமல நாச்சியார் கோயில் என்றும் சொல்வதுண்டு.

தஞ்சையில் இருந்து பழையாறை சென்றோம்.

“தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து 

பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை”  

இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த சேக்கிழார் பெருமான் வர்ணித்த பழையாறை மனதில் கற்பனையை விரித்திருக்க நாங்கள் போய் பார்த்த பழையாறை எப்படி இருந்தது?

தாராசுரம் ஐராதேஸ்வர் கோயில் ராஜராஜனின் பேரனும் ராஜேந்திரனின் மகனுமான இரண்டாம் ராஜாராஜனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. உலக பாரம்பரியப் பட்டியலில் உள்ள கோயில். இதை அடுத்து அம்மனுக்கென்று தனி கோயில் உள்ளது. பொதுவாக மற்ற சைவ தளங்களில் தனி சன்னதி மட்டுமே அமையபெற்ற அம்மனுக்கு இங்கே தனி கோயில் உள்ளது தனி சிறப்பு. ஆயிரத்தில் தொள்ளாயிரத்தி எழுபது வரை மிகவும் சிதிலமடைந்து கிடந்த கோயில். புனரமைக்கும் போது அங்கே பிரகாரங்களில் புதைந்து கிடந்த சிலைகளை எடுத்து தனியாக காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.    

தாராசுரம் ஐராவதீஸ்வரம் கோயில்

பழையாறை 

மூன்று வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் தாராசுரம் சென்ற போது எதேச்சையாக பழையாறை பெயர் பலகை கண்ணில் படவும், ஆவல் கொண்டு அங்கே போனேன். என்ன ஒரு ஏமாற்றம்! ஒரு மொட்டை, சிதிலமடைந்து கோபுரத்தில் புற்களும் செடிகளும் முளைத்து கைவிடப்பட்ட நிலையில் பரிதாபமாக இருந்தது கண்டு ஒரு வாரகாலம் உறக்கம் வராமல் தவித்தேன். எத்தகைய காலக்கொடுமை! சுமார் நானூற்றி ஐம்பது வருட காலம் சோழர்களின் தலைநகராக கோலோச்சிய இடம் இது. பொன்னியின் செல்வனில் கூட தஞ்சை தான் தலைநகரம். ஆனால் குந்தவை பிராட்டியார் பழையாறையில் வசித்து வந்ததால் முக்கிய அரசியல் முடிவுகள் அத்தனையும் இங்கேயிருந்து தான் விவாதித்து எடுக்கப்பட்டது என்று ஆசிரியர் கல்கி எழுதுகிறார். மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் கொண்ட அப்பேர்ப்பட்ட நகரம் இன்று ஒரு சிற்றூராக தன்னை சுருக்கிக் கொண்டு விட்டது காலத்தின் கொடுமையே அல்லாமல் வேறென்ன!   

நல்லவேளையாக இந்த முறை போயிருந்த போது அதே மொட்டைக் கோபுரம் தான். உள்ளே கோயில் புனரமைக்கப்பட்டு புது பொலிவுடன் திகழ்ந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. இந்த கோயில் கீழ்த்தளி சோமேஸ்வரர் என்று பெயர். 

பழையாறை முழையூர், பட்டீஸ்வரம், திருசக்தி முற்றம், சோழன் மாளிகை திருமேற்றளி கைலாசநாதர் கோயில், கோபிநாத பெருமாள் கோயில், ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்டையூர், மணப்படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம் நாதன்கோயில் என்னும் இவைகள் சேர்ந்தது தான் அன்றைய பழையாறை. படைவீடு என்பது படைவீரர்களின் குடியிருப்பு. அங்கே தான் அவர்களுக்கான பயிற்சிகள் நடக்கும். இன்று அவைகள் தனித்தனி ஊர்களாக இருக்கிறது.

பழையாறை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் தளிகள் அமைக்கப்பட்டிருந்தது. தளிகள் என்பது கற்கோயில். செம்பியன் மாதேவி செங்கற்களால் ஆன கோயில்களை கற்றளிகளாக எடுப்பித்தார் என்று சரித்திரம் சொல்கிறது. முடிகொண்டான் ஆறு என்னும் பழையாறும் திருமலைராயன் ஆறும் ஓடுகிறது.   

நாங்கள் போனது கீற்றளி எனப்படும் கிழக்குத்தளி சோமேஸ்வரர் கோயில், தாராசுரத்தைப் போலவே ரத அமைப்புடன் காணப்படுகிறது. தாராசுரம் ஐராவதேச்வர் கோயில் ராஜராஜனின் பேரன் ராஜாதிராஜன் கட்டியது. பிற்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் யுனிசெப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பழையாறை சோமேஸ்வரர் ஏன் இதில் சேர்க்கப்படவில்லை என்னும் என் கேள்விக்கு பதில் இல்லை.

கீழ்த்தளி பழையாறை சோமேஸ்வரர் கோயில். தாராசுரம் அமைப்பில் உள்ளதை கவனிக்க.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயமும் அதனுடனே இருந்த துர்கையும் அருகில் திருசக்தி முற்றமும் காணக் கிடைக்காத காட்சி. திருசக்தி முற்றத்தில் சிவலிங்கத்தை அம்மன் ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு அமைப்பை நான் எங்கும் கண்டதில்லை. சிலையில் அத்துணை ஒரு துல்லியமான வடிவமைப்பு. அடடா!

கீழ் பழையாறை சோமேஸ்வர் கோயில். பிற்காலத்தில் இந்த அமைப்பில் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதேச்வர் கோவிலின் அமைப்பை ஒப்பிடுக

கீழ்த்தளி பழையாறை 

தேனுபுரீஸ்வரர்ஆலயம் பட்டீஸ்வரம் 

எல்லாமே அரை அரை கிலோமீட்டர் தூரம் தான். வண்டியில் அப்படியே ஒரு சுற்று சுற்றிக் கொண்டு வந்து விடலாம்.

 பட்டீஸ்வரம் அருகில் திருசக்தி முற்றம்.

கோபிநாத பெருமாள் கோயில் கீழ் தளியைப் போல மொட்டை கோபுரமும், உயரமான மதில்சுவரும் ஓங்கி உயர்ந்த நுழைவாயிலுமாக பிருமாண்டமாக இருக்கிறது. உள்ளே எந்த தனி சன்னதியும் இல்லை. விஸ்தீரணமான கோயில். கருவறையுடன் ஒரு சிறிய மண்டபம் மட்டுமே உள்ளது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *