நாளை புதிய மாதம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-க்குள் நடக்க உள்ள நீங்கள் என்னென்ன நிதி நடப்புகள், நிதி மாற்றங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
வருமான வரிக் கணக்குத் தாக்கல்: சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்.
ஆனால், தணிக்கை (audit) தேவையில்லாத ITR-3 அல்லது ITR-4 தாக்கல் செய்யும் சுயத்தொழில் செய்பவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் தகுதியுள்ள சிறு வணிகர்கள், ஊக வரித் திட்டத்தைப் (presumptive taxation scheme) பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசித் தேதி ஆகஸ்ட் 31.

எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு: வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கு, டெபிட் கார்டுகளுக்கு, சேவைகளுக்கு என கட்டணம் வசூலிக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் இந்தக் கட்டணங்கள் மாறுகின்றன.
கிரெடிட் கார்டுகள்: இனி கிரெடிட் கார்டில் நிலுவையில் உள்ள கட்டணங்களுக்கு கூட்டு வட்டி கணக்கிடும் போது, செலுத்தப்படாத சேவைக்கட்டணம், அபராதங்கள் மற்றும் வரிகளை அதில் சேர்க்கக் கூடாது. இது கிரெடிட் கார்டு பில்லிங் முறையை வெளிப்படையாக்கும்.
CKYC 2.0 – இதன் விரிவாக்கம் Central Know Your Customer system ஆகும். இதன் படி, வாடிக்கையாளரின் சம்மதத்துடன் மட்டுமே நிதி நிறுவனங்கள் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முடியும்.
தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், மோசடிகளைக் குறைக்கும்.

தட்கலுக்கு டோக்கன்: நாளை முதல் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு கடைசி நேரத்தில் வரிசையில் நின்று சிரமப்பட வேண்டாம்.
தட்கல் டிக்கெட் புக்கிங் நேரத்திற்கு முன்பாகச் சென்று, தட்கல் டிக்கெட்டிற்கு டோக்கன் பெற்றுவிட்டால், தட்கல் டிக்கெட் புக் செய்வது சற்று எளிதாகும். இதன் முழு விவரம் இங்கே.
எல்.பி.ஜி சிலிண்டர்: வீட்டு பயன்பாடு, வணிக சிலிண்டர்களின் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.