திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் முடிவுகள், 2026 சட்டமன்றத் தேர்தலின் மிகவும் விறுவிறுப்பான மற்றும் பரபரப்பான ஒரு அதிசயமாக மாறியுள்ளது. தி.மு.க-வின் “நங்கூரம்’ என்று அழைக்கப்படும் அமைச்சர் கே.என். நேரு, கடும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் தனது கோட்டையைத் தக்கவைத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தின் அரசியல் இதயமாகக் கருதப்படும் திருச்சி மேற்கு தொகுதியில், காலையிலிருந்தே நிலவிய சூழல் தி.முக. தொண்டர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே அமைச்சர் கே.என். நேரு பின்னடைவைச் சந்தித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் த.வெ.க வேட்பாளரின் ஆதிக்கம் ஓங்கி நின்றதால், தி.மு.க-வின் மிக முக்கியமான விஐபி ஒருவரே தோல்வியைத் தழுவுவாரோ என்ற அச்சம் நிலவியது.

திக் திக் நிமிடங்கள்: பின்னடைவு முதல் வெற்றி வரை
தபால் வாக்குகள் மற்றும் தொடக்கச் சுற்றுகளில் கே.என். நேரு பின்தங்கியே இருந்தார். சுமார் 10 சுற்றுகள் வரை இந்த இழுபறி நீடித்தது. பிற்பகலுக்குப் பிறகு, நகர்ப்புற வாக்குகள் எண்ணப்பட்டபோது நேரு மெல்ல மெல்ல முன்னிலை பெறத் தொடங்கினார்.
அனைத்து சுற்றுகளும் முடிவடைந்த நிலையில், சுமார் 4,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் என்ற குறைந்த வித்தியாசத்தில் கே.என். நேரு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.