ஆந்திராவில் நடைபெறும் விஜயவாடா உத்சவ் 2.0வில் கலந்துக் கொள்ள நேற்று (அக்.,13) சென்ற முதலமைச்சர் விஜயை, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர்.
விஜயவாடா சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முதலில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கனகதுர்கா அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் அவருக்குப் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். ஆனால், தரிசனத்தின்போது நடந்த சில விஷயங்கள்தான் இப்போது சுவாரஸ்யமான விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.
குங்குமம் வைக்க வந்த அர்ச்சகர்… கையைப் பிடித்த விஜய்!
தரிசனம் முடிந்ததும் அர்ச்சகர் ஒருவர் முதலமைச்சர் விஜய்யின் நெற்றியில் குங்குமம் வைக்க முயன்றார். அப்போது அவர் சற்றுத் தடுமாறியதாகக் கூறப்படுகிறது. உடனே விஜய், அர்ச்சகரின் கையைப் பிடித்து குங்குமம் வைக்க உதவியிருக்கிறார்.
விஜய்க்கு மாலை இல்லையா? பாதுகாப்பு அதிகாரிகள் சொன்னதுதான் காரணமா?
பொதுவாக, கனகதுர்கா அம்மன் கோயிலில் முக்கியப் பிரமுகர்களுக்கு வேத ஆசீர்வாதம் வழங்குவதற்கு முன்பு பூமாலை அணிவிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் விஜய்க்கு மாலை அணிவிக்கப்படவில்லை. இதற்குப் பின்னால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே மாலை அணிவிப்பது தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்படியானால், முதலமைச்சரின் பாதுகாப்பு நடைமுறைகளுக்காகக் கோயிலின் வழக்கமான மரியாதைகளில் மாற்றம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
கழுத்தில் அணிய வேண்டிய அம்மன் வஸ்திரம்… கையில் வாங்கிய விஜய்!
இதற்கிடையே, இன்னொரு சம்பவமும் கவனம் பெற்றுள்ளது. தரிசனத்துக்குப் பிறகு முக்கியப் பிரமுகர்களுக்கு அம்மனின் சேஷ வஸ்திரத்தை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். ஆனால் விஜய் அந்த வஸ்திரத்தைக் கழுத்தில் அணிந்துகொள்ளாமல் கையிலேயே பெற்றுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அவரது தனிப்பட்ட விருப்பமா, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்புடையதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கோயில் மரபுகளையும் முதலமைச்சரின் பாதுகாப்பு நடைமுறைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் விவாதத்துக்கு இந்தச் சம்பவம் வழிவகுத்துள்ளது.
பெயர், நட்சத்திரம் சொல்லிப் பூஜை… தரையில் அமர்ந்த விஜய்!
கனகதுர்கா அம்மன் சன்னிதியில் விஜய் தனது பெயரையும் ஜென்ம நட்சத்திரத்தையும் தெரிவித்து பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கோயிலின் ஸ்தானாச்சாரியார் சிவபிரசாத் சர்மா, தலைமை அர்ச்சகர் துர்காபிரசாத் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க அவருக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
அப்போது முக்கியப் பிரமுகர்கள் அமருவதற்குப் பயன்படுத்தப்படும் பீடத்தைத் தவிர்த்துவிட்டு விஜய் தரையில் அமர்ந்து ஆசீர்வாதம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், ஆந்திர முதலமைச்சரைச் சந்திக்கச் சென்ற விஜய்க்கு, அதற்கு முன்பாகவே கனகதுர்கா அம்மன் கோயில் தரிசனம் பல சுவாரஸ்யமான தருணங்களைத் தந்திருக்கிறது. குங்குமம் வைக்க உதவியது, மாலை அணிவிக்கப்படாதது, வஸ்திரத்தை கையில் பெற்றது, தரையில் அமர்ந்து ஆசீர்வாதம் பெற்றது என ஒவ்வொரு நிகழ்வும் தனித்தனியாகப் பேசப்படுகிறது.

