தமிழ்நாட்டின் முக்கிய ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்த சதுப்பு நிலங்கள் பாதிக்கும் வகையில் தவெக அரசு முடிவெடுத்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், “ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் முன்மொழியப்பட்ட 1 கி.மீ. Zone of Influence-ஐ அதாவது ஏறத்தாழ 3000 எக்டேரைத் த.வெ.க. அரசு 128.19 எக்டேராகக் குறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

ஒரு ஈரநிலம் அல்லது ஈரநிலத் தொகுப்பின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் எங்கெல்லாம் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அது அந்த ஈர நிலத்தில் பாதிப்பை எற்படுத்துகிறதோ அப்பகுதிகள் அனைத்தும் ZoI என்கிற “தாக்க மண்டலம்” என வரையறுக்கப்பட வேண்டும். ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (IMP) தயாரிக்கும் பணியை NCSCM மேற்கொண்டு வருகிறது.