நகை திருடி ஊர் மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி கொண்டாட்டம்; சினிமா பாணியில் தப்ப முயன்ற நடிகர் கைது | Actor arrested for stealing jewelry and distributing it as Diwali gifts to the local people

Spread the love

சென்னை – திருவனந்தபுரம் விரைவு ரயிலில் குமாரி (66) என்ற மூதாட்டி கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பயணம் செய்தார். தனது பேத்தியின் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த 47 பவுன் நகைகளை பையில் வைத்து, படுக்கைக்கு அடியில் வைத்திருந்தார்.

ரயில் பாலக்காடு நிலையத்தை அடைந்தபோது அந்தப் பை திருடுபோனது தெரியவந்தது. இந்தப் புகாரின்பேரில், பாலக்காடு ரயில்வே காவல் துறையும், ரயில்வே பாதுகாப்புப் படையும் இணைந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தன. ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, முகக்கவசம் அணிந்த ஒரு நபரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சைபர் க்ரைம் உதவியுடன் அவரைப் பின்தொடர்ந்து சென்ற போது, அவர் கோவையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பது தெரியவந்தது.

நகை திருடிய பாலமுருகன் கைது

நகை திருடிய பாலமுருகன் கைது

விசாரணையில் பாலமுருகன் குறும்படங்கள், திரைப்படங்களில் நடித்தவர் என்பதும், விடியோ எடிட்டராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட இவர், வெளியுலகுக்கு ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். ஆனால், சொந்த ஊரில் தன்னை ஆன்மிகவாதியாகவும், நல்லவராகவும் காட்டிக்கொண்டு இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். 

ரயிலில் நகைகளைத் திருடிய கையோடு ஊருக்குச் சென்ற இவர், அந்தப் பகுதி மக்களுக்கு விலைமதிப்பற்ற பரிசுப் பொருள்களை வழங்கி தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.  போலீசாரிடம் சிக்காமல் இருக்க திரைப்பட பாணியில் இவர் பாலக்காட்டில் ரயிலில் இருந்து இறங்கி ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து ஐந்து பேருந்துகளில் மாறி மாறி ஏறி தப்பியுள்ளார்.

கண்காணிப்பு கேமராக்களில் முகம் பதியாமல் இருக்க முகக்கவசம் அணிந்ததுடன், நெற்றியை கைகளால் மறைத்துக் கொண்டும், வழியிலேயே உடைகளை மாற்றிக் கொண்டும் போலீசாரை ஏமாற்ற முயன்றுள்ளார். பாலமுருகனிடமிருந்து 36.42 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

பாலமுருகன் மீது ஏற்கெனவே மதுரையில் ஓடும் ரயிலில் கையடக்க மடிக்கணினி திருடிய வழக்கும் உள்ளது” என்றனர்.

இவருக்குப் பின்னால் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா என்பது குறித்தும், மீதமுள்ள நகைகளை மீட்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *