குச்சி போல முளைக்கும் “இமயமலை வயாக்ரா..” தங்கத்திற்கு இணையான ரேட்! லட்ச கணக்கில் போகுமாம்! | What is Himalayan gold: Yarsa Gumba Secrets, Why Himalayan Fungus Caterpillar Costs Up to Rs 20 Lakh

Spread the love

International

-Vigneshkumar

காத்மண்டு: இமயமலையில் உள்ள ஒரு விசித்திரமான பூஞ்சை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போடுகிறது. இமயமலை தங்கம் என்று அழைக்கப்படும் இதை கண்டுபிடிக்க அங்குப் பல நூறு கிராமங்கள் தேடி அலைவார்களாம். அதென்ன இமயமலை தங்கம்.. இதன் பின்னணி.. இது எதற்கு நன்மை தரும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களில், இயற்கையின் ஒரு விசித்திரமான படைப்பு ஏற்படுகிறது. அதன் பெயர் ‘யார்சா கும்பா’ (Yarsa Gumba). அப்பகுதி மக்கள் இதை ‘கீடா ஜாடி’ (Keeda Jadi) என்றும் அழைக்கிறார்கள். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு தங்கத்திற்கு நிகராக இருப்பதால், இது ‘இமயமலையின் தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

Himalayan gold india offbeat

யார்சா கும்பா என்றால் என்ன?

இது ஒரு பூஞ்சை மற்றும் ஒரு கம்பளிப்பூச்சியின் விசித்திரமான கலவையாகும். ‘கோஸ்ட் மாத்’ எனப்படும் இது மண்ணுக்கு அடியில் இருக்கும்போது, ‘கார்டிசெப்ஸ் சைனென்சிஸ்’ (Cordyceps sinensis) என்ற பூஞ்சை அவற்றைத் தாக்குகிறது. அந்தப் பூஞ்சை கம்பளிப்பூச்சியின் உடலுக்குள்ளேயே வளர்ந்து, மெல்ல மெல்ல அதைக் கொன்று, அதன் தலையிலிருந்து ஒரு சிறிய செடி போல வெளியே நீட்டிக்கொண்டு வளரும். இது பார்ப்பதற்கு ஒரு சிறிய காய்ந்த குச்சி போலத் தோற்றமளிக்கும்.

சீனா போன்ற நாடுகளின் சந்தையில், ஒரு கிலோ யார்சா கும்பா 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. இதன் மருத்துவ குணங்களுக்காக இது ‘இமயமலையின் வயாக்ரா’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஏன் இமயமலையில் மட்டுமே வளர்கிறது?

யார்சா கும்பா வளர்வதற்கு இயற்கை மிகவும் அரிதான மற்றும் குறிப்பிட்ட சூழல் தேவைப்படுகிறது. இத்தகைய சூழல் நேபாளம் மற்றும் திபெத் போன்ற இமயமலைப் பகுதிகளில் மட்டுமே நிலவுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 3,500 முதல் 5,000 மீட்டர் (11,000 முதல் 16,000 அடி) உயரத்தில் உள்ள புல்வெளிகளில் மட்டுமே வளரும். இந்த உயரத்திற்கு மேலேயோ அல்லது கீழேயோ பூஞ்சையாலோ அல்லது கம்பளிப்பூச்சியாலோ உயிர்வாழ முடியாது.

குளிர்காலத்தில் வெப்பநிலை -10 டிகிரி முதல் -20 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். அப்போது பெய்யும் கடும் பனிப்பொழிவு மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கும். இந்த உறைபனியில்தான் பூஞ்சை சுறுசுறுப்பாகி கம்பளிப்பூச்சிகளைத் தாக்குகிறது. கோஸ்ட் மாத் கம்பளிப்பூச்சிகள் இமயமலையின் குளிர்ந்த அதேநேரம் வறண்டு இருக்கும் மண்ணில் மட்டுமே வாழ்கின்றன. இவை இல்லையென்றால் யார்சா கும்பா உருவாக வாய்ப்பே இல்லை.

பணம் கொட்டும்

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் ஜூலை வரையிலான கால பகுதியில், நேபாளத்தில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் அப்படியே காலியாகிவிடும். அவர்கள் மொத்தமாக இந்த யார்சா கும்பாவை தேடி கிளம்பிவிடுவார்கள். ஏனென்றால் இந்த மலைப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் மிகக் குறைவு. விவசாயம் வாழ்வாதாரத்திற்குப் போதுமானதாக இருப்பதில்லை. இந்த இரண்டு மாத கால அறுவடையில் ஒரு நபர் சம்பாதிக்கும் பணம், அவர் ஒரு வருடம் முழுவதும் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் பள்ளிகள் கூட மூடப்பட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.

குடும்ப குடும்பமாக!

பனி உருகத் தொடங்கும் வசந்த காலத்தில் மட்டுமே இது மண்ணிலிருந்து வெளியே தெரியும். அந்தச் சில வாரங்களுக்குள் இதைக் கண்டுபிடிக்காவிட்டால், அது அழுகிவிடும் அல்லது காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டுவிடும். இது புற்களுக்கு இடையே ஒரு சிறிய பழுப்பு நிறத் தண்டு போல மறைந்திருக்கும். இதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மக்கள் தரையில் படுத்துக்கொண்டு, ஊர்ந்து சென்றுதான் இதை தேடுவார்கள். கூர்மையான பார்வை கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது எளிதாகத் தென்படும் என்பதால் குடும்பமே ஒன்றாக சேர்ந்து இதைத் தேடுவார்கள்.

இதற்காக மக்கள் பல வாரங்கள் கடும் குளிரில் கூடாரங்கள் அமைத்துத் தங்குவார்கள். தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தாங்களே சுமந்து கொண்டு மலை உச்சிக்கு செல்வார்கள்.

யார்சா கும்பாவின் மருத்துவப் பயன்கள்

இது உடலில் ATP உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உடல் சோர்வைக் குறைத்து, உடற்பயிற்சி அல்லது கடின உழைப்பிற்கான திறனை மேம்படுத்துகிறது. இது பாலியல் உணர்வைத் தூண்டவும், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும், ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடுகளைச் சரிசெய்யவும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்றுநோய்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராட உதவுகின்றன. நுரையீரல்கள் ஆக்சிஜனைச் சிறப்பாகப் பயன்படுத்த இது உதவுகிறது. இதனால் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதயத் துடிப்பைச் சீராக்கவும் உதவுகிறது. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது. இயற்கையின் இந்த விசித்திரமான படைப்பு, இமயமலை மக்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளது. இதனால்தான் இது ‘இமயமலையின் தங்கம்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. இவை முழுமையாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *