தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூரி பெரியகோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இந்தக் குப்பைக் கிடங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாவதாகக் கூறுகின்றனர். நகரம் விரிவடைந்து விட்டது, தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டியாக மாறி விட்டது. ஆனால் இந்தக் குப்பைக் கிடங்கால் ஏற்படும் அவலங்களுக்கு மட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென எரிய அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது. செக்கடி, மேல அலங்கம், மேலவீதி, வடக்கு அலங்கம் பகுதி முழுவதும் புகை பரவியதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேறினா்.
தஞ்சாவூர் திமுக எம்.பி முரசொலி, பொறுப்பு மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பார்வையிட்டனர். தஞ்சாவூர் தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டனர்.