புதுக்கோட்டை தவெக கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்கத் தடை. கலெக்டர் அலுவலக அறைக்குள் வைத்து பூட்டிய அதிகாரிகள்.
புதுக்கோட்டையில் இன்று பல்வேறு அரசு நலத்திட்டத் தொடக்க விழாக்களில் பங்கேற்க வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யைச் சந்தித்து மனு அளிப்பதற்காகச் சென்ற தவெக கூட்டணிக் கட்சித் தலைவரும், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான கே.எம்.செரீப், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் வைத்துப் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கே.எம்.செரீப்பை தொடர்பு கொண்டு பேசினோம்.
“‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில் தவெக கூட்டணியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தவன் நான்.
இன்றும் தவெக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இன்று காலை 9:45 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், த.ம.ஜ.க. மாவட்டச் செயலாளர் யூசுப் ராஜா, காங்கிரஸ் நிர்வாகி இப்ராஹிம் பாபு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றோம்.
முதலமைச்சரைச் சந்திப்பதற்கான வி.ஐ.பி. பாஸூம் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இருப்பினும், முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, டி.ஆர்.ஓ மற்றும் காவல்துறையினர் என்னையும் எமது கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையும் முதல்வரைச் சந்திக்கவிடாமல் ஆட்சியர் அலுவலகத்தின் ஓர் அறைக்குள் அமரவைத்து வெளிப்புறமாகப் பூட்டி வைத்துவிட்டனர்.
குடிநீர் மற்றும் அடிப்படை கழிப்பறை வசதிகள் கூட இல்லாத அந்த அறையில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நாங்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்தோம்.
முதலமைச்சர் நிகழ்வை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகுதான் எங்களை வெளியே திறந்து விட்டனர்.
கடந்த தேர்தலில் இதே கூட்டணியில் போட்டியிட்டு 2-வது இடம் பிடித்த கூட்டணிக் கட்சித் தலைவர் என்றும் பாராமல், கைவசம் வி.ஐ.பி பாஸ் இருந்தும் கூட, காங்கிரஸ் கட்சியினரையும் எங்களையும் குடிநீர் மற்றும் கழிவறை வசதி கூட இல்லாமல் இரண்டரை மணி நேரம் பூட்டி வைத்தது எந்த வகையில் நியாயம்?” என வெளியே கே.எம்.செரீப் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொதிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.