அரசியல் இலாப நட்டக்கணக்குதான்!
அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காது, ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் பொதிந்திருப்பது மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல.
தவறான முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்!
அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்.
ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என்று விமர்சித்திருக்கிறார்.