கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சுற்றி திரியும் யாசகர் சிலர் இரவு நேரம் குளச்சல் காவல் நிலையம் எதிரே செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் அருகே படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி மாலை மிடலாம் உதயமார்த்தாண்டம் நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் குளச்சல் பகுதியில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு குளச்சல் ஆவின் பாலகம் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது சாலையோரம் நின்று விளையாடிக் கொண்டிருந்த அவரது மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். அந்த சுற்றுவட்டார பகுதிகளில் தேடியதுடன், உறவினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று விசாரித்தும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மறுநாள் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சிறுமி மாயம் என வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் தாய்மாமன் முறையான இசக்கியப்பன் என்பவர் விளையாடி கொண்டிருந்த சிறுமியை பைக்கில் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து இசக்கியப்பனின் செல்போன் லொக்கேஷனை கண்காணித்து வந்த போலீஸார் 4 நாட்களுக்கு பின் கடந்த வியாழக்கிழமை அன்று டவர் லொக்கேஷன் மூலம் இசக்கியப்பன் கோவில்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் இருப்பதை கண்டறிந்தனர். அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டதோடு இசக்கியப்பனை குளச்சல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமியின் தாய் மாமன் முறையான இசக்கியப்பனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று தனது தங்கை வீட்டில் அடைத்து வைத்ததுடன், சிறுமியை யாசகம் எடுக்க வைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இசக்கியப்பன் மீது சிறுமியை கடத்தி யாசகத்திற்கு பயன்படுத்த முயன்றது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீஸார் அவரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.