பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்பமேளாவுக்குப் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வாய்த்தன. இதற்கிடையே சினிமாவில் நடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்மான் கானுக்கும் அந்த பெண்ணுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பூவாறு பகுதியில் ஒரு கோயிலில் வைத்து 11.03.2026 அன்று திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி தம்பானூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துவிட்டதாக ஆவணங்களையும் காட்டினர். இவர்களது திருமணத்தில் கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், இது லவ் ஜிகாத் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், தனக்கு 18 வயது ஆகிவிட்டதாக அந்த பெண் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கும்பமேளா வைரல் பெண்ணுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை எனவும், அதற்கு முன்பே திருமணம் செய்ததாகவும் பெண்ணின் தந்தை தேசிய பழங்குடியின ஆணையத்துக்கு புகார் அளித்திருந்தார். இதையடுத்து, முஹம்மது ஃபர்மான் கானுக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தின் மஹேஷ்வர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.