தினசரித் தேவையைவிட எப்போதும் அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வது யாருக்குமே நல்லதல்ல. சாதாரணமாக ஒரு நாளைக்குத் தேவையான உப்பின் அளவு 5 கிராம் என்றால், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 7.5 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தூள் உப்பிற்கு (Table Salt) பதிலாக கல் உப்பு, இந்துப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. செயற்கையாக உப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல. எல்லாவற்றையும் விட, காய்கறிகள் மற்றும் கீரை போன்ற இயற்கையான உணவுகளின் மூலம் உடலுக்குத் தேவையான சோடியத்தைப் பெறுவதே ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் (Dehydration) ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புண்டு. எனவே, நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடாமல், சிறு சிறு இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம். படுக்கையில் இருந்தோ அல்லது நாற்காலியில் இருந்தோ சட்டென்று எழுந்து நிற்க வேண்டாம். நிதானமாக எழுந்து உட்கார்ந்து, பிறகு மெதுவாக எழுந்து நிற்பதுதான் சரி. நீண்ட நேரம் வெயிலில் நிற்பதையோ அல்லது அதிக சூடான நீரில் குளிப்பதையோ தவிர்க்கவும். மது அருந்துவது ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கக்கூடும் என்பதால் அந்தப் பழக்கம் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
தீவிரமான தலைசுற்றல் அல்லது மயக்கம், பார்வை மங்குதல், மூச்சு விடுவதில் சிரமம், அதிகப்படியான சோர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். உங்களுக்கு ஏற்கெனவே இதய நோய் அல்லது சிறுநீரக பாதிப்பு இருந்தால், உப்பின் அளவை அதிகரிப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.