குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; விண்ணை முட்டிய 'ஓம் காளி ஜெய் காளி' முழக்கம்

Spread the love

இந்தியாவில் கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் -முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. நேற்று இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று அதிகாலை  1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

கொடியேற்றம்
கொடியேற்றம்

தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது மேளதாளங்கள் கொடிப்பட்டம், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோயில் முன்புள்ள கொடிமரத்திற்கும் கொடிக்கும் சிறப்புப் பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ”ஓம் காளி.. ஜெய் காளி ஓம் சக்தி.. பராசக்தி..” எனக் கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தசரா குழுவினர் மற்றும் பக்தர்கள் விரதம் இருப்பதற்கான மாலை அணிந்து கையில் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினர்.

இன்று தொடங்கிய இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த 10 நாட்களும் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அவரவர்களது சொந்த ஊர்களில் கூடாரம் அமைத்து விரதம் இருந்து காளி, அம்மன், முருகன், விநாயகர், அனுமன், குறவன், குறத்தி எனப் பல்வேறு வேடங்கள் பூண்டு ஊர் ஊராகச் சென்று தர்மம் எடுப்பார்கள்.  

கொடியேற்றம்
கொடியேற்றம்

அதில் கிடைக்கும் காணிக்கையை தசராவின் கடைசி நாளன்று கோயில் உண்டியலில் செலுத்துவார்கள். விழா நாட்கள் தினமும் இரவில் அம்பிகை முத்தாரம்மன், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

முதல்நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும்,

5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் வைபவம் நடைபெற உள்ளது.

கொடியேற்றம்
கொடியேற்றம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வரும் அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  தசரா திருவிழா நாட்களில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *