பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி
வழிபாடு என்பது ஏதோ கண்களை மூடிக்கொண்டு, ஏதோ கைகளைக் குவித்துக் கொண்டு செய்வது அல்ல. அது உள்ளில் இருந்து உருகக்கூடியது. உள்ளொளியால், இருளைப் போக்கக்கூடிய வகையிலானது. ஸ்ரீபாலா என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை ஆத்மார்த்தமாகவும் முழு ஈடுபாட்டுடனும் சிரத்தையுடனும் வழிபடுபவர்களுக்கு அவள், தன் அருள்மழையைப் பொழிவாள்!
தெய்வங்கள் பல உண்டு. வழிபாடுகளிலும் பல வகைகள் இருக்கின்றன. சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சாக்த வழிபாடு, முருக வழிபாடு, விநாயக வழிபாடு என்றெல்லாம் உண்டு. இதில் சாக்த வழிபாடு ரொம்பவே முக்கியமானது. சாக்த வழிபாடு என்றால் சக்தி வழிபாடு என்று அர்த்தம். பெண் தெய்வ வழிபாடுகள் மிக மிக வலிமையானவை. வாழ்வில் இல்லறத்திலும் சொந்த பந்தங்களிலும் உள்ள சகல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் பெண் தெய்வ வழிபாடுகள் தீர்த்துவைக்கும் என்கின்றனர் சாக்த வழிபாடு உபாஸகர் ராமகிருஷ்ண சாஸ்திரிகள்.
அம்பிகையின் திருநாமங்கள் பலப்பல! அம்பிகையின் திருவுருவங்கள் பலப்பல! அம்பிகை என்பவள் அருள்மழை பொழிபவள், அருளும் பொருளும் அள்ளித்தருபவள் என்றுதான் தேவி மகாத்மியம் விவரிக்கிறது. நமக்கெல்லாம் அன்னையெனத் திகழ்கிறாள் அம்பிகை. ஆனால், அந்த அன்னையை சிறுமியாக, ஒன்பது வயதுக் குழந்தையாக வழிபடுகிற முறையும் உள்ளது. அப்படி ஒன்பது வயது சிறுமியாகவும் இருந்து அருள்பாலிக்கிறாள் அம்பிகை. அப்படி அம்பிகைகளில் ஒருத்தியான ஸ்ரீராஜேஸ்வரி எடுத்துக்கொண்ட அவதாரம் தான் ஸ்ரீபாலா.
ஸ்ரீபாலா என்றும் பாலா என்றும் பாலா திரிபுரசுந்தரி என்றும் அழைத்துப் போற்றப்படுபவளின் மகாசக்தி மகோன்னதமானது. எழுத்தாளர் பாலகுமாரனிடம் உதவியாளனாகப் பணியாற்றிக்கொண்டிந்தபோது, மேற்கு மாம்பலத்தில் உள்ள பட்டு வாத்தியார் என்பவரிடம் அழைத்துச் சென்றார். ‘இவனுக்கு மகா கணபதி மந்திரமும் பாலா மந்திரம் உபதேசிக்கணும்’ என கேட்டுக்கொண்டார். அவரிடம் கிட்டத்தட்ட ஒருமாதத்துக்கும் மேலாகச் சென்று, மந்திரங்களை ஜபிக்கக்கற்றுக்கொண்டேன். பட்டு வாத்தியார் காஞ்சி சங்கரமடத்துக்கு ரொம்பவே அணுக்கமானவர். இன்றைக்கும் அவரின் வாரிசுகள், மந்திர ஜபங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி எனும் தேவதையை, தேவியை, அம்பாளை ஆராதிப்பதும் பூஜிப்பதும் வழிபடுவதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் என்பது உறுதி! ஸ்ரீவித்யை எனப்படும் சக்தி உபாஸனையில், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி மிக முக்கியமான தெய்வமாகத் திகழ்கிறாள்! ஸ்ரீபாலாவின் மந்திரம், பல்லாயிரம் மடங்கு சக்தியும் வீரியமும் கொண்டது. ‘ஸ்ரீவித்யை’யில் உள்ள எல்லா மந்திரங்களின் பலன்களையும் உள்ளடக்கிய மந்திரம், பாலாவின் மந்திரம் என்று வியக்கின்றனர் ஆச்சார்யர்கள். குழந்தை பாலாவை, சிறுமி பாலாவை, பாலா திரிபுரசுந்தரி எனும் கண்கண்ட தெய்வத்தை மனதார வழிபட்டால், இழந்த கவுரவம், இழந்த பதவி, இழந்த உறவு, இழந்த செல்வம் என சகலத்தையும் பெறலாம்!
செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் ஸ்ரீபாலாவை செவ்வரளி மலர் சூட்டி, விளக்கேற்றி பூஜித்து வந்தால், வீட்டில் ஏற்படும் கண் திருஷ்டியைக் களைந்தெடுப்பாள். ஏமாற்றியவர்களையும் எதிர்ப்பவர்களையும் தவிடுபொடியாக்குவாள். பவுர்ணமி நாளில், ஸ்ரீபாலாவை, ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன், கர்மசிரத்தையாக வழிபடுங்கள். காலம் அறிந்து தேவைகளை நிவர்த்தி செய்வாள். காலத்துக்கும் நம்மை வாழச் செய்வாள் பாலா திரிபுரசுந்தரி.
பக்தர்களையெல்லாம் குழந்தையைப் போல் பாவித்து அருள்பாலிக்கும் அன்னையானவள், குழந்தையாக, சிறுமியாக இருந்து அருள்பாலிக்கும் தெய்வம்… ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி. கருணையே உருவானவள். அன்பே வடிவானவள். அருளைப் பொழிபவள். பாலா எனும் திருநாமம், குழந்தைக்கான சொல். பாலா என்பவள் ஒரு குழந்தைதான். ஒன்பது வயது சிறுமிதான். ஆனால், உலகில் சூழ்ந்திருக்கும் தீயசக்திகளையெல்லாம் அழித்தொழிக்கும் வல்லமை மிக்கவள்!
பாலா திரிபுரசுந்தரியை வணங்குவோம். அவளின் காயத்ரியைச் சொல்லுவோம். ஒரு பத்துநிமிடம் கண்கள் மூடி, எந்தநாளாக இருந்தாலும் அவளிடம் நம் குறைகளையெல்லாம் சொல்லி முறையிடுவோம்.
ஸ்ரீபாலாவின் காயத்ரி:
ஓம் பால ரூபாயை வித்மஹே
ஸதா நவ வர்ஷாயை தீமஹி
தந்நோ பாலா ப்ரசோதயாத்
குழந்தையென உருவான அன்னையே. அழல்கண் அரனின் தேவியே. கருணையை மழையாகப் பொழிபவளே. எங்கள் பாலா திரிபுரசுந்தரியே உன்னை வணங்குகிறேன்!
பலம் தரும் ஸ்ரீபாலா எனும் குழந்தையை வணங்குவோம். அவள் குழந்தைதான்; சிறுமிதான். ஆனால் நம் கண்ணீரையும் துயர்களையும் துடைத்தெறியும் தாய் அவள்!

