குவியும் அனல் மின் நிலையங்கள்; இந்தியாவின் அனல் மின் நிலையத் தலைநகரம் ஆகிறதா தூத்துக்குடி?| poovulagin nanbargal about thoothukudi thermal power station

Spread the love

தூத்துக்குடியில் அமைக்கப்பட இருக்கும் அனல்மின் நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “தூத்துக்குடியில் ஏற்கனவே Moxie, NTPL, SEPC, TNPGCL, DCW ஆகிய நிறுவனங்களின் 4,793.27 மெகாவாட் திறன் கொண்ட 14 அனல் மின் நிலைய அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசும் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் புதிதாக 9,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை தூத்துக்குடியில் அமைக்கவுள்ளன.

இவையனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தூத்துக்குடியில் மட்டும் 13,063.27 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்படும். இதன் மூலம் இந்தியாவில் அனல் மின் நிலையத் தலைநகரமாக தூத்துக்குடி மாறும் அபாயம் உள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஆகஸ்ட் 31 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் எரிசக்தித் துறை சார்ந்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தூத்துக்குடியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பழைய 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அனல் மின் நிலைய அலகுகளைப் படிப்படியாக மாற்றிவிட்டு பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில், 1600 (2*800) மெகாவாட் திறன் கொண்ட புதிய மிக உய்ய அனல் மின் நிலையம் (New Supercritical Thermal Power Station) 20,800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.

பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள்

அதே போல் 12.10.2026 அன்று நடந்த மின்வாரியத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி உடன்குடியில் stage 2 மற்றும் 3ல் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த 2*660 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட அலகுகளுக்குப் பதிலாக இரண்டு கட்டத்திலும் 2*800 மெகாவாட் அலகுகள் நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3200MW தூத்துக்குடி உடன்குடியில் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அதானி குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான Moxie Power Generation Limited நிறுவனம் ஏற்கெனவே 1200 (2*600) மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலைய அலகுகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக 3200 மெகாவாட் (4*800) உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி கடந்த நவம்பர் 2ஆம் தேதி ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அதானி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்குட்பட்ட மேல்மருதூர், தருவைகுளம், துரைசாமிபுரம், பட்டினமருதூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இடங்களில் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 36,000 கோடியாகும்.

இவற்றின் அடிப்படையில் பார்த்தால் தூத்துக்குடியில் புதிதாக 9320 MW அளவிற்கான 12 அனல் மின் நிலைய அலகுகள் அமைக்கப்படவுள்ளன. தூத்துக்குடியில் மட்டும் ஏற்கனவே 4793.27 MW அளவிற்கான அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வரும் சூழலில்தான் புதிதாக 9320 MW அளவிற்கான புதிய அனல் மின் நிலைய அலகுகளை அமைக்க தமிழ் நாடு அரசும், தனியார் நிறுவனங்களும் முயற்சி எடுத்து வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *