கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியில் கூடத்தில் தறவாடு என அழைக்கப்படும் உமா மந்திரம் வீடு அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பாரம்பர்ய கேரள பாரம்பர்ய நாலுகெட்டு ஓட்டுவீடு இது.
வீடு மட்டுமே சுமார் 16 சென்ட் நிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீட்டில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை 7 மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இறுதியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜெயமாதவன் நாயர் என்பவர் மர்மமான முறையில் இறந்தார்.
ஜெயமாதவன் நாயரின் போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணத்திற்குக் காரணம் என்னவென்று குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த வீட்டில் சொத்துகளைக் கவனித்துவந்த ரவீந்திரன் நாயர் என்பவருக்கு மாதவன் நாயர் ரூ.30 கோடி மதிப்பிலான தனது சொத்துக்களை எழுதிக் கொடுத்திருப்பதாக 2019-ம் ஆண்டு தகவல் வெளியானது.
ஜெயமாதவன் நாயர் குடும்பத்தில் நடந்த மரணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சொத்துக்களைக் கவனித்துவந்த சிலர் சொத்தின் சில பகுதிகளை அபகரித்திருப்பதாகவும் அவரது உறவினராக பிரசன்னகுமாரி என்பவர் 2019-ம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கூடத்தில் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியத் திருப்பமாக அக்குடும்பத்தின் சொத்துக்களைப் பராமரித்து வந்த (காரியஸ்தர்) ரவீந்திரன் நாயர் (60) என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த மரணம் குறித்து போலீஸார் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்திவந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “கூடத்தில் குடும்பத்தின் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துகளுக்கு வாரிசுகளாக இருந்த கோபிநாத பிள்ளை, அவரது மனைவி சுமுகியம்மா, இவர்களது பிள்ளைகளான ஜெயபாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், ஜெயஸ்ரீ, கோபிநாத பிள்ளையின் சகோதரர் வேலுப்பிள்ளையின் மகன் உன்னிகிருஷ்ணன் நாயர், மற்றொரு சகோதரரான நாராயண பிள்ளையின் மகன் ஜெயமாதவன் நாயர் ஆகிய 7 பேர் கடந்த 15 ஆண்டுகளில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இந்த 7 பேரின் இறப்புக்குப் பிறகு, அவர்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான பரம்பரைச் சொத்துகள் அனைத்தும் “தான செட்டில்மென்ட்’ மற்றும் ‘உயில்’ மூலம் காரியஸ்தர் ரவீந்திரன் நாயர் மற்றும் சிலரது பெயருக்குக் கைமாறியது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்தே, உள்ளூரைச் சேர்ந்த அனில்குமார் மற்றும் குடும்பத்தின் உறவினரான பிரசன்னகுமாரியம்மா ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.