Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வதில் கேகேஆர் அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. கேகேஆர் அணிக்கு கேப்டனின் தேவை இருக்கும் நிலையில், ரிங்கு சிங் மற்றும் ஹர்சித் ராணாவை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேப்டன் பதவி என்பதால் ஹர்திக் பாண்டியாவும் ஆலோசனையில் இருந்து வருகிறார்.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வதில் அந்த அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாகவே மினி ஏலத்திற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் சூழலிலேயே, ஹர்திக் பாண்டியா டிரேட் டீல் தொடர்பான தகவலை கசியவிட்டது. ஏனென்றால் மும்பை அணி அதிக வாய்ப்புகள் இருக்கும் போது எளிதாக முடிவு எடுக்க முடியும்.

ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தீவிரமாக இருக்கின்றனர். ஏற்கனவே கூறியதை போல் சிஎஸ்கே அணி சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகிய இரு இந்திய வீரர்களை கொடுக்க முன் வந்திருக்கிறது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் சிஎஸ்கே அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் மும்பை அணியோ இன்னும் சில அணிகளுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கிறது. அதாவது டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல் மற்றும் அஷுதோஷ் சர்மாவை கொடுக்க முன் வந்துள்ளனர். மறுபக்கம் கேகேஆர் அணி தரப்பில் ரிங்கு சிங் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோரை கொடுக்க முன் வந்திருக்கிறது. முதலில் கேமரூன் க்ரீன் மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷியை கொடுக்கவும் தயாராக இருந்தது.
ராஜஸ்தான் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேட்டுள்ளது. மும்பை அணி முன்பாக இந்த 4 வாய்ப்புகள் முன் இருக்கிறது. இதில் கேகேஆர் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி வாய்ப்பும் அளிக்க தயாராக இருப்பதாக கூறி இருக்கிறது. கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே ஓய்வை அறிவித்துவிட்டார்.
இதனால் புதிய கேப்டனுக்கான தேடுதல் படலத்தை கேகேஆர் அணி நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஹர்திக் பாண்டியாவும் மும்பை அணியின் கேப்டனாக சொதப்பி இருப்பதால், தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார். இதனால் மும்பை அணி கேகேஆர் அணி கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்த தயாராக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்ரனர்.