பழம்பெரும் நடிகை சுமித்ராவின் மகளான நடிகை உமா, தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். கோவை பிரதர்ஸ், தென்றல், சூரி, சொக்கத் தங்கம், கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சொக்கத் தங்கம் படத்தில் விஜயகாந்த் தங்கையாக நடித்ததன் மூலம் உமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார். சில சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு துஷ்யத்தை திருமணம் செய்து கொண்ட பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய உமா குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், அவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் தெரியவந்தது.
தற்போது மார்பகப் புற்றுநோய்க்கான இரண்டாம் கட்ட சிகிச்சையில் இருக்கும் உமா, கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகளை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “நம்பிக்கையுடன் போராடி வருகிறேன். சவாலான நாட்களையும் தைரியமாக எதிர்கொண்டு வருகிறேன். என் மீது அன்பும் ஆதரவும் காட்டி வரும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
உமாவின் இந்த மனஉறுதியான பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


