கேரளம்: தாயின் உடலை 3 நாள்கள் வீட்டில் வைத்து பூஜை; மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் போலீஸ் விசாரணை | Kerala: Son kept mother’s body at home for three days and performed rituals

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்தூப்புழா கூவக்காடு பகுதியில் உள்ள ஆர்.பி.எல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னத்தாம்மாள் (90). அவரது மகன் கிருஷ்ணசுவாமி (60).

மனைவியைப் பிரிந்து வாழும் மறுவாழ்வுத் தோட்டத் தொழிலாளியான கிருஷ்ணசுவாமியும், அவரது தாய் சின்னத்தாம்மாளும் அந்தக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சின்னத்தாம்மாள் கடந்த இரண்டு வாரங்களாக வீட்டிற்கு வெளியே வரவில்லை.

இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக வீட்டிலிருந்து தொடர்ச்சியாக ஊதுபத்தி மற்றும் சந்தனத்தின் நறுமணம் வந்து கொண்டிருந்துள்ளது. மேலும், கிருஷ்ணசுவாமியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார், வெள்ளிக்கிழமை இரவு சின்னத்தாம்மாளின் பேத்திக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு சின்னத்தாம்மாளின் பேத்தி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு பாட்டி இறந்த நிலையில் உள்ளதைப் பார்த்தார். இதையடுத்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, படுக்கையறையில் துணியால் மூடப்பட்ட நிலையில் சின்னத்தாம்மாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அறையின் பல இடங்களில் ஊதுபத்திகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டிருந்தன. சின்னத்தாம்மாள் இறந்து சுமார் மூன்று நாள்கள் ஆகியிருக்கலாம் என்றும், ஊதுபத்திகள் மற்றும் சந்தணக்கட்டைகள் தொடர்ந்து எரிக்கப்பட்டதால் துர்நாற்றம் வெளியே தெரியவில்லை என்றும் கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *