கேரள மாநிலம், கொச்சி தெற்கு சித்தூர் நெல்லுவேலில் புத்தன்பறம்பில் வீட்டைச் சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (55). இவர் சித்தூர் கோயில் அருகே தள்ளுவண்டி உணவகம் (தட்டுக்கடை) நடத்தி வந்தார். ஜெயபாலகிருஷ்ணன் நேற்று முன் தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு சித்தூர் வீட்டிற்கு சென்று குளித்து உடை மாற்றிவிட்டு மாஞ்ஞாலியிலுள்ள தனது புதிய வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தின் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கூடுதல் மாவட்ட நீதிபதியின் 17 வயது மகன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற பென்ஸ் கார், ஜெயபாலகிருஷ்ணனின் ஸ்கூட்டரின் பின்பக்கம் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயபாலகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே, சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜெயபாலகிருஷ்ணனின் பணப்பை மற்றும் பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனுக்கு பிந்து என்ற மனைவியும், பரத் சங்கர், பத்ர கீர்த்தி, பாக்ய தர்ஷன் ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்ற போதிலும், சுமார் நூறு மீட்டருக்குப் பிறகு தானாகவே நின்றது. காரை விட்டு இறங்காமல் உள்ளேயே அமர்ந்திருந்தான் சிறுவன். தகவலறிந்து வந்த போலீஸார் சிறுவனை அழைத்துச் சென்றனர். அலட்சியமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த சேரானல்லூர் காவல்துறையினர், சிறுவனைக் கைது செய்து நேற்று மாலையிலேயே காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இதற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளப்பியதைத் தொடர்ந்து, இரவில் அவரை மீண்டும் போலீஸார் அழைத்து சிறுவர் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டது. கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனுக்கு காரை வழங்கியதற்காக, காரின் உரிமையாளரான நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தனது மகனுக்கு கார் ஓட்டவே தெரியாது என்று நீதிபதி போலீஸாரிடம் கூறியிருந்தார். அதே சமயம் கார் ஓட்ட வேண்டும் என்ற தீராத ஆசையினால் காரை எடுத்ததாக 17 வயது சிறுவன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் தூங்கியதை உறுதி செய்த பிறகு, ஆலுவாவிலுள்ள குடியிருப்பில் இருந்து காரை எடுத்துக்கொண்டு தனியாக வெளியே வந்துள்ளார். சாலையில் தேங்கியிருந்த மழைநீரைக் கண்டு காரைத் திருப்பியபோது கட்டுப்பாடு இழந்ததாகக் கூறினார். சிறுவன் மது அருந்தியிருக்கவில்லை என்றாலும், வேறு போதைப்பொருள்கள் ஏதேனும் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.