கேரளம்: லாட்டரி சில்லறை வியாபாரிக்கு அடித்தது யோகம்; விஷூ பம்பர் பரிசாக ஏழைக்கு கிடைத்த ரூ.12 கோடி!

Spread the love

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. ஓணம் பண்டிகை, சித்திரை விஷூ, ஆயுதபூஜை உள்ளிட்ட முக்கிய விழாக்காலங்களை முன்னிட்டு அதிக பரிசுகளைக் கொண்ட லாட்டரிகள் விற்பனை செய்வது வழக்கம். சித்திரை விஷூ தினத்தை முன்னிட்டு 12 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யப்பட்டன. ஒரு டிக்கெட் விலை 300 ரூபாய் வீதம் இந்த முறை அச்சிடப்பட்ட 45 லட்சம் டிக்கெட்டுகளும் முகவர்களுக்கு விற்கப்பட்டுவிட்டதாக லாட்டரித் துறை அறிவித்துள்ளது. இந்த முறை பாலக்காடு மாவட்டம் அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு 42,87,350 டிக்கெட்டுகள் விற்பனையாகின. இந்த நிலையில் விஷூ பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. அதில் VB 135452  என்ற எண்கொண்ட லாட்டரிச்சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. கொல்லம் மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளி சப்-ஆபீஸ் முகவரும், மணப்பள்ளியைச் சேர்ந்தவருமான லாட்டரி வியாபாரி அனிலின் ஏஜென்சியில் இருந்துதான் பரிசுக்குரிய VB 135452 எண் கொண்ட டிக்கெட் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. பம்பர் பரிசுபெற்ற அதிஷ்டசாலி யார் என தேடியபோது கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான பொன்னன் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு அந்த பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது. பொன்னனின் மனைவி ராதாமணியம்மாவும், மகன் வினோத் குமாரும் லாட்டரி சில்லறை வியாபாரிகள் ஆவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கேரள விஷூ லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் அரிசாக வென்ற பொன்னன்

கேரள விஷூ லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் அரிசாக வென்ற பொன்னன்

பல ​கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று லாட்டரி விற்பனைசெய்து வந்தார் 76 வயதான பொன்னன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வியாபாரத்தை நிறுத்திவிட்டு சிறிய அளவில் பெயிண்டிங் வேலைகளுக்கு வேண்டியதாயிற்று. குடும்பம் பட்டினி நிலைக்கு தள்ளப்படும் என்ற நிலையில் 67 வயதான மனைவி ராதாமணியும் 37 வயதான மகன் வினோத்தும் லாட்டரி விற்பனைக்கு இறங்கினர். ​வினோதிற்கு காலில் செயல் திறன் குறைபாடு உள்ளது. இருந்தபோதிலும் தினமும் 14 கிலோமீட்டர் நடந்துதான் லாட்டரி விற்பனை செய்துவருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு காய்ச்சல் வந்து வீட்டில் நாட்கணக்கில் படுத்திருந்தார் வினோத். காய்ச்சல் குறைந்தபோது வியாபாரம் தொடங்குவதற்காக டிக்கெட் வாங்கி வர பொன்னனை தழவா மணப்பள்ளியிலுள்ள “அம்மா ஏஜென்சி’க்கு சென்றார். அங்கிருந்து எடுத்த லாட்டரிச்சீட்டுதான் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *