கேரள மாநிலம் எர்ணாகுளம் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான கடவும்பாகம் யூத வழிபாட்டுத் தலத்தின் நுழைவு வாயில் அருகே, கடந்த 12-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் காரில் வந்த நபர் ஒருவர் அங்கு தீ வைத்தார். வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயில் அருகே அமைந்துள்ள “பிளாசம் நர்சரி’ என்ற தாவர வளர்ப்பு மையப் பகுதியிலும் தீ பரவியது. தீ வைத்ததையும், தீ எரிவதையும் தனது செல்போனிலேயே வீடியோவாக பதிவு செய்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும், கார் பதிவு எண்ணையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதன் முடிவில், எர்ணாகுளம் புத்தன்குரூஸ் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த எபின் பி. பால் (32) என்பவரை சில மணி நேரங்களிலேயே போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களும், வழிபாட்டுத் தலத்திற்கு தீ வைத்த வீடியோ பதிவும் மொபைல் போனிலிருந்து கைப்பற்றப்பட்டன. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஹெராயின், உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கைதான எபினின் மொபைல் போனை விரிவாக ஆய்வு செய்ததில், சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு ‘பாஸ்’ உடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த யூத வழிபாட்டுத் தலத்தை எரிக்க ‘பாஸ்’ எபினுக்கு ரூ. 10 லட்சம் தருவதாக உறுதியளித்து, முன்பணமாக ரூ. 2 லட்சத்தை வழங்கியுள்ளார். இதன்பேரிலேயே எபின் இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

அடுத்தகட்டமாக உத்தரப் பிரதேசம், டெல்லி, மும்பை, அமிர்தசரஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கிய மையங்களைத் தாக்கும் கொடூரத் திட்டம் தீட்டப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதற்காக, எபினுக்குத் தேவையான ஆயுதங்களை நேரில் கொண்டுவந்து சேர்க்கவும், ஆயுதங்களை ஆன்லைனில் வாங்குவதற்கான சிறப்பு இணையதள லிங்க்குகளையும் பாகிஸ்தானிய ‘பாஸ்’ டெலிகிராம் செயலி மூலம் எபினுக்கு வழங்கியுள்ளார். இந்த ஆயுத பேரம் தொடர்பான சாட்கள் அவரது செல்போனில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. எபின் அந்த பாகிஸ்தான் ‘பாஸ்’ உடன் எவ்வாறு தொடர்பை ஏற்படுத்தினார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எபின் முன்னதாக கனடாவில் தங்கியிருந்தபோது, அங்குள்ள தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்பட்டு, அதன்மூலம் இந்த ‘பாஸ்’ அறிமுகமாகி இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இவர் தடைசெய்யப்பட்ட ஆபாச இணையதளங்களை தொடர்ந்து பார்த்தவர் என்பதால், லைவ் வீடியோ காலில் சிக்க வைத்து ‘பிளாக்மெயில்’ செய்யப்பட்டு இச்செயலை செய்ய வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும்,புனேவில் டிசைனிங் படிப்பு பயின்றபோது போதைப்பொருள் நெட்வொர்க்குடன் ஏற்பட்ட டெலிகிராம் நட்பு வழியே இந்த சதி வலையில் வீழ்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.