ரூ.9,500 கோடி லாபம் தரும் IDBI வங்கியை விற்பதா? ‘Atmanirbhar’ இதுதானா? – வங்கிகள் சங்கம் எதிர்ப்பு

Spread the love

ஐ.டி.பி.ஐ வங்கியில் இருக்கும் மத்திய அரசின் 30.48 சதவிகிதப் பங்கையும், எல்.ஐ.சியின் 30.24 சதவிகிதப் பங்கையும் கனடா நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் வாங்க நேற்று (அக்டோபர் 14) ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அரசு.

வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் (United Forum of Bank Unions – UFBU) மத்திய அரசின் இந்த நகர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் நாளை (அக்டோபர் 16) போராட்டத்தை அறிவித்துள்ளது.

இப்போது லாபத்தை ஈட்டுகிறது IDBI!

யூ.எஃப்.பி.யூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐடிபிஐ வங்கியில் தங்களுக்கு உள்ள பங்குகளை விற்பனை செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்
ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்

இந்திய அரசும் எல்.ஐ.சி நிறுவனமும் இணைந்து ஐடிபிஐ வங்கியின் 94% பங்குகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

அதிகளவிலான வராக் கடன்கள் காரணமாக, இந்த வங்கி முன்னர் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்தது. ஆனால் இப்போது வங்கி சிறப்பாகச் செயல்பட்டு வருவதுடன், ஆண்டுதோறும் ஈர்க்கக்கூடிய வகையில் கணிசமான லாபத்தையும் ஈட்டி வருகிறது.

முன்னர் ஐடிபிஐ நிறுவனம் ஐடிபிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டபோது, எந்தவொரு சூழலிலும் அரசின் பங்குகள் 51 சதவீதத்திற்குக் குறையாது என்று நாடாளுமன்றத்தில் அரசு உறுதியளித்திருந்தது.

ஆனால், தற்போதைய அரசோ ஐடிபிஐ வங்கியை விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது.

எவ்வளவு நிகர லாபம்?

இன்று வங்கியில் உள்ள மொத்த பொதுமக்களின் வைப்புத்தொகை சுமார் ₹3,50,000 கோடி ரூபாயாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வங்கி முறையே ₹5,600 கோடி, ₹7,500 கோடி மற்றும் ₹9,500 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இவ்வாறாக, சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு வங்கியே தாரைவார்க்கப்படுகிறது.இது வெறும் தனியார்மயமாக்கல் மட்டுமல்ல. மாறாக அந்நியமயமாக்கல்.

வங்கியின் 60% பங்குகளைக் கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸுக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

அறிக்கை
அறிக்கை

சுயசார்பு இதுவா?

அரசு ‘ஆத்மநிர்பார்’ (சுயசார்பு) பற்றிப் பேசுகிறது, ஆனால் பொதுமக்களின் சேமிப்பைக் கொண்ட இந்த முக்கிய வங்கி ஒரு வெளிநாட்டு முதலீட்டாளருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது முற்றிலும் தேவையற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசின் இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *