வெனிசுலாவைத் தொடர்ந்து கிரீன்லாந்தில் எண்ணெய், கனிம வளங்களை அள்ளுவோம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு | After Venezuela, let’s go after oil and mineral resources in Greenland : Trump’s bold announcement

Spread the love

International

oi-Velmurugan P

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜீவநாடியே கச்சா எண்ணெய் பொருளாதாரம்தான். உலகில் உள்ள முக்கியமான கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா, அங்கு எண்ணெய் வளங்களை எடுத்து உலக நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்கிறது. அதேபோல், டாலரில்தான் எண்ணெயை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அண்மையில் அதிக எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவைக் கைப்பற்றிய அமெரிக்கா, அடுத்ததாக கிரீன்லாந்து பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளது. அங்குள்ள எண்ணெய் மற்றும் கனிம வளங்களை எடுப்பதற்கான ஆய்வில் இறங்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

அதிக எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் அண்மையில் கொண்டு வந்தது. அடுத்ததாக உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்புகிறது. அங்குப் பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் அரிய வகைக் கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன. இவற்றை ஆய்வு செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு விரும்புகிறது.

After Venezuela let s go after oil and mineral resources in Greenland Trump s bold announcement

தற்போது ஆர்க்டிக் கடல் பகுதியில் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் அங்கு மறைந்துள்ள இயற்கை வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். இதற்காகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரம்மாண்ட நிதி ஒதுக்கீட்டுடன் புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.

இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கிரீன்லாந்தில் மிகப்பெரிய அளவிலான எண்ணெய், எரிவாயு மற்றும் கனிம வள ஆய்வு விரைவில் தொடங்கும்” என்று அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளார்.

அமெரிக்கா ஏன் கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த விரும்புகிறது என்றால், எண்ணெய், எரிவாயு மற்றும் கனிமத் திட்டங்களில் முதலீடு செய்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் முதல் இலக்கு. இரண்டாவதாக, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக முக்கியம். ஆர்க்டிக் பகுதியில் அதன் செல்வாக்கை வலுப்படுத்தினால், கப்பல் போக்குவரத்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வரும் என்பதுதான் நோக்கம். இதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.

கிரீன்லாந்து என்பது ஒரு தனிநாடு என்று கூற முடியாது. அது டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பகுதியாகும். இது அமெரிக்காவின் பகுதி கிடையாது. வேறு நாடாக இருந்தாலும், ஆசைப்பட்டால் எடுத்துக்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அமெரிக்காவின் இயல்பு. அலாஸ்காவில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “கிரீன்லாந்தில் மிகப்பெரிய அளவிலான எண்ணெய், எரிவாயு மற்றும் கனிம வள ஆய்வு நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.

ஆர்க்டிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கவே கிரீன்லாந்தில் அமெரிக்கா கால் வைக்க விரும்புகிறது. அதேபோல், ரஷ்யாவின் ராணுவ பலத்தையும் முறியடிக்க அமெரிக்கா ராஜதந்திர நகர்வாக இதனை மேற்கொள்கிறது. மின்சார வாகனங்கள், காற்றாலை, மின்னணு சாதனங்கள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அரிய கனிம வளங்கள் கிரீன்லாந்தில் கொட்டிக்கிடக்கின்றன. தற்போது இந்தக் கனிமங்களுக்கு அமெரிக்கா சீனாவைத்தான் சார்ந்துள்ளது. அந்தச் சார்பு நிலையைக் குறைக்க விரும்புகிறது.

அடுத்ததாக, அமெரிக்காவின் புவியியல் ஆய்வு அமைப்பான USGS, மேற்கு கிரீன்லாந்து-கிழக்கு கனடா கடல் பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத, தொழில்நுட்ப ரீதியாக எடுக்கக்கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆய்வு செய்ததில், சராசரியாக 7.8 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. அதேபோல், சராசரியாக 91.9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை மேற்கு கிரீன்லாந்து-கிழக்கு கனடா பகுதியைச் சேர்த்து எடுக்கப்பட்ட மதிப்பீடுகள். கிரீன்லாந்தில் மட்டும் எவ்வளவு உள்ளது என்பது துல்லியமாகத் தெரியவில்லை.

இந்தப் பல லட்சம் கோடி மதிப்புள்ள இயற்கை எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது. அதேபோல், கிரீன்லாந்து வட அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான முக்கியமான புவியியல் பகுதியில் இருக்கிறது. ஏவுகணை எச்சரிக்கை அமைப்புகள், விண்வெளிக் கண்காணிப்பு, ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கு கிரீன்லாந்து முக்கியமான ராணுவ மையமாக இருக்கும். அதேபோல், ஆர்க்டிக் கடல் பனியின் அளவு மாறுவதால், கப்பல் போக்குவரத்துக்கான வாய்ப்புகள் புதிதாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. எனவே, அப்படி நடந்தால், அங்கு செல்வாக்கு செலுத்தும் நாடுதான் உலகிற்கே நாட்டாமை என்கிற அளவில் இருக்கும். இந்தக் கணக்குகள் காரணமாகவே அமெரிக்கா கிரீன்லாந்தை விரும்புகிறது.

ஆனால், அண்மையில் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்களுடன் டிரம்ப் கையெழுத்திட்ட ஒப்பந்தமானது, அங்கு பாதுகாப்பு மற்றும் ராணுவத் தளங்களை அமைப்பதற்கான வழியை மட்டுமே உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு எந்தவிதமான சிறப்புக் கனிம ஆய்வு உரிமைகளையும் வழங்கவில்லை. அதேபோல், பனிப்பாறைகளுக்கு நடுவில் உள்ள அரிய வகைக் கனிமங்கள் மற்றும் எரிசக்தி வளங்களை எடுப்பது எளிதானது கிடையாது. அமெரிக்காவின் நடவடிக்கைகளைச் சீனாவும் ரஷ்யாவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *