கைதாகும் செந்தில்பாலாஜி? பறிபோகும் எம்.எல்.ஏ பதவி? பதற்றத்தில் அறிவாலயம்! – Kumudam

Spread the love

‘விடாது கருப்பு’ என்பது போல செந்தில்பாலாஜியை எதாவது ஒரு வழக்கைவைத்து தவெக அரசு டார்கெட் செய்துகொண்டிருப்பதாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில் செந்தில்பாலாஜி விரைவிலேயே கைதாகலாம் என்றும் அவரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகலாம் என்றும் லீக் ஆகியிருக்கும் தகவல் அறிவாலயத்தை  ஆட்டம் காண வைத்துள்ளது.

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்படும் செந்தில்பாலாஜியை கரூர் விவகாரத்தில் எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று விஜய் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே துடித்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது . தவெகவை பொறுத்தவரை கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கும் திமுக விற்கும் குறிப்பாக அப்போதைய கரூர் எம்.எல்.ஏ-வாக இருந்த செந்தில்பாலாஜிக்கும் பெரும் தொடர்பு இருப்பதாகவும் இதற்கு பின்னால் அவர்களின் சதி இருப்பதாகவும் தவெக உறுதியாக நம்புகிறதாம்.  இதனால் 41 பேர் மரணத்திற்கு தன்மீது போட்ட பழியை துடைக்க செந்தில்பாலாஜியை கட்டம் கட்டி தூக்கினால் மட்டுமே தன்னுடைய புண்ணிற்கு அருமருந்தாக இருக்கும் என்று விஜய் நினைப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் அடுத்தடுத்த வழக்குகள் அவரைச்சுற்றி வருவதாக கூறப்படுகிறது.  

இப்படி அவரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சட்ட சிக்கலான வழக்குகள் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக முன்வைத்து வரும் நிலையில், திமுக தரப்பும் சட்ட ரீதியான அணுகுமுறையையே பின்பற்றுகிறது. 

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் “விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் ஒருவரை எவ்வாறு கைது செய்ய முடியும் என்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காவிடில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், ” என்றுக்கூறி அவருடைய கைதை ரத்துசெய்துள்ளது. மேலும் செந்தில்பாலாஜி தரப்பில் ‘சட்டரீதியான விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் வெளியூருக்கு தப்பிச்செல்லமாட்டார்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்னதான்,  உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு  ஆதரவாக உத்தரவு அளித்திருந்தாலும், சட்டப்படி அந்த உத்தரவுக்கு எதிராக தவெக தரப்பு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்புகள் உள்ளதாகவும்  மீண்டும் அவர் கைது செய்யப்படலாம் என்றும், அதோடு அவரது எம்.எல்.ஏ பதவியும்  பறிப்போகலாம்  என்று உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர் .  

ஆனால், சட்டமன்ற உறுப்பினரின் பதவியானது  வழக்கு விசாரணையின் போதோ, கைது நடவடிக்கையின்போதோ  பறிக்கப்படாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் சட்ட விதிகளின் அடிப்படையில்தான் பதவி தகுதி குறித்து முடிவுகள்  எடுக்கப்படும் என்று சட்ட வல்லுனர்கள்  தெரிவிக்கின்றனர்  . 

ஆகையால், என்னதான் முதலமைச்சர் விஜய்  தேர்தல் பிரசாரத்தின்போது  “பாட்டிலுக்கு 10 ரூபா 10 ரூபா” என்று செந்தில் பாலாஜியை விமர்சித்தாலும், செந்தில் பாலாஜியோ  வழக்கு விசாரணைகளில் ‘பழம் திண்னு கொட்டை போட்டவர்’ என்பதால் த வெகவின் செ.ப-விடம் பலிக்காது என்று சொல்லப்படுகிறது. 

செந்தில்பாலாஜி தொடர்பான வழக்குகளில் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் வெளியாகும் நிலையில், திமுக தலைமையகமான அறிவாலயத்திலும் இந்த வழக்கின் முன்னேற்றம் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் சூழல் கட்சியில் நிலவுவதாக கூறப்படுகிறது. தேர்தலின்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால், கரூரை விட்டு கோவை கிழக்கில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில்பாலாஜி மற்றும்  அவரது எம்.எல்.ஏ பதவியின் நிலை, வழக்கு விசாரணைகளின் இறுதிக்கட்ட தீர்ப்பின் அடிப்படையிலேயே அமையும் என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *