கைதான அருள் விக்னேஷ்.. எம்எல்ஏ பதவி பறிபோகுமா? அடுத்த 24 மணிநேரத்தில் என்ன நடக்கும்? ரூல்ஸ் இதோ | Kallakurichi TVK MLA Arrest: What will be happen for next 24 hours? details here

Spread the love

Tamilnadu

oi-Nantha Kumar R

கள்ளக்குறிச்சி: ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் பெண் கலெக்டர் ஒருவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கையை தொடர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் என்னென்ன விஷயங்களை போலீசார் பின்பற்றுவார்கள்? பதவி பறிபோகுமா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தற்போது கைதாகி உள்ள தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சியில் உள்ள ‘தியாகதுருகம்’ சுற்றுலா மாளிகையில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் வழக்கின் விசாரணை அதிகாரியான திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் ஐபிஎஸ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kallakurichi

இந்நிலையில் தான் அடுத்த 24 மணிநேரத்தில் என்னென்ன விஷயங்களை போலீசார் பின்பற்றுவார்கள்? அவரது எம்எல்ஏ பதவி பறிபோகுமா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

பொதுவாக ஒரு எம்எல்ஏ கைது செய்யப்பட்டால் உடனடியாக சட்டசபை சபாநாயகருக்கு காவல்துறை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இது சட்டசபை விதிகளின்படி உள்ள நடைமுறையாகும். இதனால் போலீசார் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது பற்றிய விவகாரத்தை சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதில் எம்எல்ஏ கைது செய்யப்பட்டது ஏன்? எந்த நாளில், எந்த நேரத்தில், எங்கு வைத்து கைது செய்யப்பட்டார்? என்பது பற்றி விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

எம்எல்ஏ உள்பட யாரை கைது செய்தாலும் அடுத்த 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். இரவு நேரம் என்றால் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அதன்படி அருள் விக்னேஷ் எம்எல்ஏ நீதிபதியின் வீட்டில் ஆஜர்ப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணிநேரம் வரை நீதிமன்றம் அல்லது நீதிபதியின் வீட்டில் ஆஜர்ப்படுத்த காலக்கெடு இருந்தாலும் கூட பொதுவாக போலீசார் உடனடியாக ஆஜர்ப்படுத்துவார்கள். ஏனென்றால் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதனை தடுக்க உடனடியாக போலீசார் செயல்படுவார்கள். அதன்படி அருள் விக்னேஷ் இன்று இரவு கள்ளக்குறிச்சி நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்த வாய்ப்புள்ளது.

நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டால் 2 விஷயங்கள் நடக்கும். ஒன்று கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார். இன்னொரு விஷயம் கஸ்டடியில் எடுத்து போலீஸ் விசாரணைக்கு நீதிபதி அனுமதி வழங்குவார். இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் தற்போது வரை எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் போலீசார் விசாரிக்கவில்லை. இதனால் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கு நீதிபதியின் அனுமதி கட்டாயம்.

ஒருவேளை சிறையில் அடைக்கப்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அழைத்து சென்று சோதனை நடத்துவார்கள். கைது நடவடிக்கையின் போது அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த இந்த சோதனை மேற்கொள்ளப்படும். இவை அனைத்தும் கைதான 24 மணிநேரத்தில் நடக்க வேண்டும் என்பது தான் சட்டம். இதனை போலீசார் பின்பற்ற உள்ளனர்.

மேலும் எம்எல்ஏவாக இருப்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் சிறை விதிகளின்படி அவருக்கு ஏ கிளாஸ் அறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் எம்எல்ஏவாக இருக்கும் ஒருவரை போலீசார் கைது செய்தாலே அவரது பதவி பறிபோய்விடாது. குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் வாயிலாக 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே அவருடைய பதவி பறிக்கப்படும். இதனால் தற்போதைய கைது நடவடிக்கையால் அருள் விக்னேஷின் எம்எல்ஏ பதவிக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *