இந்த நிலையில், மாணிக்கம் தாகூரின் விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது,
“மனநோயாளிகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால், பொதுவெளியில் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ‘ஏற்கெனவே நாங்கள் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ என்று எங்கள் தலைவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
அதாவது, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
அடுத்து, 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
இந்த இரண்டு கோரிக்கைகள்தான் தி.மு.க-வினுடைய கோரிக்கைகள். இந்த இரண்டுதான் பேசப்படும்; இந்த இரண்டிலும்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை எங்கள் தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து ஏற்கெனவே சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு இது குறித்தான மசோதா கொண்டுவந்தபோது, கட்சியின் துணைப்பொதுசெயலாளர் கனிமொழியும் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், எந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறது என்பதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவரே இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், அந்தக் கட்சி இப்போது உள்ளதும் காணாமல் போய்விடும்!
போய்ச் சேருகிற இடங்களுக்கு ஏற்ற மாதிரி பேசிக்கொண்டு திரிகிற இந்த மனநோயாளிகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், அவர்கள் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை; எந்த அடிப்படையும் இல்லை.
ஒரு புரிதலும் இல்லாமல், ‘நாம் உட்கார்ந்திருக்கிற இடத்தில் தி.மு.க-வைப் பேசினால் ஏதோ தினந்தோறும் கிடைப்பதில், கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் பேசுவார்களேயானால், அவர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும். நாங்கள் அதற்குப் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார் காட்டமாக.