'கொச்சை மொழிகளை எப்போது தவிர்ப்பீர்கள் உதயநிதி?'

Spread the love

முதல்வர் குறித்தும் ஒரு பிரபலமான பெண் குறித்தும் தரக்குறைவாக பேசியதால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவதூறு பேச்சுகளுக்கு உடனது கைது என்பதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இங்கே எதிர்க்கட்சித் தலைவர் எனும் உயரிய அந்தஸ்த்தில் இருப்பவரின் பொறுப்பையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி அந்தக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்து தொண்டர்கள் ஒரு பெண்ணின் பெயரை கோரஸாக உச்சரிக்கிறார்கள். பேச்சின் இடையே அதை கவனித்த உதயநிதி நமட்டு சிரிப்போடு முகம் சுளிக்கும் வகையில் கண்ணியக்குறைவாக ஒரு கமெண்டை அடிக்கிறார். அத்தனை அருவருப்பாக இருக்கிறது அந்த கமெண்ட்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி கமெண்ட் அடிப்பதே அரசியல் மாண்பை குத்தி கிழிக்கும் செயல். இதை உதயநிதி முதல் முறை செய்யவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கி உதயநிதி இப்படி கொச்சையாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்ததை அத்தனை வக்கிரமாக பேசியிருந்தார். அப்போதே அந்த பேச்சு விமர்சனங்களை எதிர்கொண்டது. அப்போதும் அவர் தன்னுடைய பாணியை மாற்றிக் கொள்ளவில்லை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் இன்னும் தரக்குறைவாக இறங்கி ஒவ்வொரு கூட்டத்துக்கும் எடப்பாடி சசிகலாவின் காலில் விழுந்த படத்தை எடுத்து வந்து வாய்க்கு வந்தபடி பேசினார். எதிர்த்தரப்பில் எடப்பாடியும் பதிலுக்கு பதில் கண்ணியக்குறைவாக பேச, யார் அதிகம் அசிங்கமான வார்த்தைகளை உதிர்ப்பது என்ற போட்டி எடப்பாடிக்கும் உதயநிதிக்கும் நடந்து கொண்டிருந்தது.

இதோ இப்போது மீண்டும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். இதில் ஒரு செட்டப் இருப்பதையும் கவனிக்க முடியும். ‘உதயநிதி எங்கே பேசினார்?’ கூட்டத்திலிருந்து சிலர் கத்தினார்கள். அவர் ரியாக்ட் செய்தார் அவ்வளவுதான் என சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கின்றனர் திமுக ஆதரவாளர்கள். இது ஒரு பேட்டர்ன். எடப்பாடியை சசிகலா காலில் விழுந்ததை பற்றி விமர்சிக்கையிலும் இப்படித்தான் செய்தார். கூட்டத்திலிருந்து யாராவது சசிகலா என்பார்கள்… உடனடியாக சிரித்துக்கொண்டே, ‘நான் கேட்கவில்லை. இது நேயர் விருப்பம்’ எனக் கூறிவிட்டு உதயநிதி தனது கொச்சை வசனங்களை தொடர்வார்.

உதயநிதி ஸ்டாலின்

அதே பேட்டர்னில்தான் தஞ்சாவூரிலும் நடந்திருக்கிறது. உதயநிதி ஒன்றும் திமுகவின் மூன்றாம் தர மேடைப் பேச்சாளர் இல்லை. அவர் கட்சிக்குள் வந்த நான்கே ஆண்டுகளில் துணை முதல்வர் எனும் நிலைக்கு உயர்ந்தவர். இப்போது அவரை கட்சியின் செயல் தலைவர் ஆக்கும் கோரிக்கைகளும் கட்சிக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 75 ஆண்டுகால மாபெரும் கட்சியின் இன்றைய முகம் அவர். அப்படிப்பட்டவர் கண்ணியத்தோடும் பிறரின் சுயமரியாதைக்கு மதிப்பளித்து முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. திமுக சுயமரியாதை பேசி வளர்ந்த கட்சி. சுயமரியாதை நம்முடைய கண்ணியத்தை மட்டும் பேணிக் காப்பது அல்ல.

பிறரின் கண்ணியத்துக்கும் அந்தஸ்துக்கும் உரிய மரியாதை அளிப்பதுதான் சுயமரியாதை. தன்னுடைய தொண்டர்கள் பிறரின் சுயமரியாதையை இழிவுப்படுத்தும் விதத்தில் கோஷமிட்டால் அங்கேயே அவர்களை கண்டித்து சீர்ப்படுத்த வேண்டிய பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது. அதை விடுத்து அவர்கள் எடுத்துக் கொடுக்கும் பாய்ண்ட்டை வைத்து கொச்சை மொழியில் பேசி உற்சாகப்படுத்தினால் இந்த வக்கிரம் மேடைக்கு மேடை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மேலும், இந்த இழிவான செயல்களெல்லாம் பெண்களை மையப்படுத்தியதாகத்தான் இருக்கிறது. சுயமரியாதையோடு பெண் விடுதலை பேசிய பெரியாரின் வழி வந்த இயக்கம் திமுக. அந்த இயக்கத்தின் இன்றைய முகமாக திகழ்பவர் முற்போக்கு பேசுபவராக பெண்கள் முன்னேற்றத்துக்கான உந்துதலாக இருக்க வேண்டும். அதை விடுத்து கொச்சை மொழிகளுக்கு பெண்களை தொடுகாயாக பயன்படுத்திக் கொள்வது துளியும் கண்ணியமற்ற செயல். திமுகவின் இன்னொரு முகமான கனிமொழி இந்தப் பேச்சையெல்லாம் ரசிப்பாரா என்பதை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டால் கூட இப்படியெல்லாம் பேச வார்த்தைகள் வராது.

இப்போதும் உதயநிதி அந்த பேச்சுக்கு வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை. மாறாக, பேச்சை வெட்டி ஒட்டிவிட்டார்கள் என ஊதுபத்தி சுற்றிக் கொண்டிருக்கிறார். இங்கே முதல்வருக்கு இருக்கும் மரியாதை எதிர்க்கட்சி தலைவருக்கும் இருக்கிறது. மக்களின் குரலாக ஆளும் அரசு கண்டுகொள்ளாமல் தவிர்க்கும் பிரச்னைகளை இடித்துரைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கிறது. கொச்சை மொழிகளை தவிர்த்து மக்கள் மொழியில் மக்களுக்காக உரையாடப் பாருங்கள் உதயநிதி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *