பெற்றோரின் வழிகாட்டுதலுடன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசைத்தறியில் 80 மீட்டர் தேசியக் கொடியை நெய்து உலக அங்கீகாரம் பெற்ற அண்ணன்–தங்கையான தமிழ்ச்செல்வன் – செந்தமிழமுதுவின் சாதனை கவனம் ஈர்த்துள்ளது.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணன்–தங்கையான தமிழ்ச்செல்வன் (6-ம் வகுப்பு) மற்றும் செந்தமிழமுது (3-ம் வகுப்பு), 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்டன் கோட்டா (Cotton Kotta) பருத்தி நூலைப் பயன்படுத்தி, விசைத்தறியில் 80 மீட்டர் நீளமும், 2 அடி அகலமும் கொண்ட தேசியக் கொடியை நெய்து உலகச் சாதனை படைத்துள்ளனர்.
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, துட்டம்பட்டியில் பயிலும் தமிழ்ச்செல்வனும், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி, இடையப்பட்டியில் பயிலும் செந்தமிழமுதும், தங்களது பெற்றோரின் வழிகாட்டுதலுடன் இந்த முயற்சியை மேற்கொண்டனர். நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலேயே இந்த உலகச் சாதனை முயற்சி வடிவமைக்கப்பட்டது.