மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். திடீரென மழை பெய்யத் தொடங்கியதும் பலா் முண்டியடித்து பந்தலில் ஒதுங்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். 25 பேர் காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவா்களுக்கு கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்களில் ஒருவர் சோனு பால் (25). குமோர்துலியைச் சேர்ந்த இவர், தன் தாயுடன் துர்கா பூஜையைக் காண வந்திருந்தபோதுதான் இந்த திடீர் அசம்பாவிதம் நடந்துள்ளது. இது குறித்து பேசிய அவர், “என் அம்மா என் கண் முன்பே நெரிசலில் சிக்கி நசுங்கி உயிரை விட்டார். நானும் பிழைத்திருக்கக் கூடாது. வெளியே பலத்த மழை பெய்ததால், மழைக்கு ஒதுங்குவதற்காக நுழைவாயிலில் நின்றிருந்தவர்கள், உள்ளே நுழைய ஒருவரையொருவர் தள்ளத் தொடங்கினர். அந்தத் தள்ளுமுள்ளுவில் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். நான் எப்படியோ சுதாரித்து எழுந்து என் தாயைத் தேடிச் சென்றபோது, அவர் உயிரற்றுக் கிடந்தார்,” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.