`மகனுடன் சேர்ந்து ஏரி மண் திருட்டு’ – திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு! | the directorate of vigilance and anti-corruption has registered a case against former dmk minister e.v.velu and son

Spread the love

கடந்த 14-12-2025 அன்று, தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்கான மாநாடு திருவண்ணாமலை அருகேயுள்ள மலப்பாம்பாடியில் நடைபெற்றது. இதற்கான மொத்த ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர் அப்போதைய அமைச்சரும் தி.மு.க வடக்கு மண்டல பொறுப்பாளருமான எ.வ.வேலு.

தனது மூத்த மகன் குமரன் பெயரில் ரூ.46 கோடியில் வாங்கப்பட்ட சுமார் 124 ஏக்கர் பரப்பளவிலான சர்க்கரை ஆலை இடத்தில்தான்`கலைஞர் திடல்’ என்ற பெயரில் மாநாட்டுக்கான பெரிய திடலையும் சமன்படுத்தினார். இதற்காக அருகிலிருக்கும் மலப்பாம்பாடி ஏரியில் இருந்து ஆயிரக்கணக்கான லோடு மண் சட்டத்துக்குப் புறம்பாக அள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.8 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் எ.வ.வேலு மீது பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

`தனிப்பட்ட முறையில் வணிகரீதியாக எ.வ.வேலு பயனடைந்தார்’ என்று உழவர் உரிமை இயக்கம் மற்றும் அறப்போர் இயக்கமும் குற்றச்சாட்டுகளை அடுக்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகாரளிக்கப்பட்டது.

மண் திருடப்பட்ட மலப்பாம்பாடி ஏரி

மண் திருடப்பட்ட மலப்பாம்பாடி ஏரி

இந்த நிலையில்தான் எ.வ.வேலு மற்றும் அவரின் மகன் குமரன் ஆகியோர் மீது இந்த மாதம் 24-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அதாவது, “எ.வ.வேலு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அதிகாரிகளின் துணையோடு மலப்பாம்பாடி ஏரியில் இருந்து சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி ஆழம் வரை சட்டவிரோதமாகப் பள்ளம் தோண்டி மண்ணை அள்ளியுள்ளார்.

மாநாடு நடைபெற்ற இடத்தை சமன்படுத்துவதற்காக, ஏரியில் இருந்து சுமார் 45,72,058 கன அடி ஏரி மண் கடத்தப்பட்டிருக்கிறது. இதனால், அரசுக்கு 8,22,97,044 ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், மாநாடு நடைபெற்ற எ.வ.வேலுவின் குடும்பச் சொத்தின் நுழைவு வாயில் வரை செல்வதற்காக, மலப்பாம்பாடி ஏரியின் கரை மற்றும் உட்பகுதிகள் வழியாக சட்டவிரோதமாக அணுகுசாலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாக விதிமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது’’ என்று முதல் தகவல் அறிக்கையில் புகார் குறித்து விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல் புகாரிலும் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மேலும் ஒரு ஊழல் முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது எ.வ.வேலு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *