சந்திரசேகரனுக்கு எதிராக நிற்கும் டாடா தரப்பு.. ரூ.65 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு! அதிகார மோதல் உச்சம் | Tata Group Crisis: Two Tata Trusts Seek Rs 65 Crore Compensation Over Chandrasekaran Reappointment

Spread the love

Business

oi-Vigneshkumar

மும்பை: டாடா குழுமத்தில் நிர்வாக ரீதியான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மேனாக சந்திரசேகரன் மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, இரு டாடா அறக்கட்டளைகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர உள்ளன. இந்த வழக்குகளில் டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் 6 இயக்குநர்களிடம் இருந்து மொத்தம் ரூ.65 கோடி நஷ்டஈடு, ஆண்டுக்கு 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் மிக பெரிய தொழில் குழுமம் என்றால் அது டாடா குழுமம் தான். உப்பு முதல் விமானம் வரை கிட்டத்தட்ட எல்லா பிஸ்னஸிலும் டாடா குழுமம் இருக்கிறது. இந்த டாடா சாம்ராஜ்ஜியத்தில் தான் ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு குழப்பங்கள் தொடர்ந்து வருகிறது.

Tata Group Crisis

பெரிதாக வெடித்த மோதல்

முதலில் சிறு பூசலாக வெடித்த இது இப்போது மிக பெரிய மோதலாக வெடித்துள்ளது. டாடா சன்ஸ் சேர்மேனாக சந்திரசேகரன் இருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை அவர் அந்த பதவியில் இருந்துவிட்ட நிலையில், மூன்றாவது முறையாக அவரது பதவி சமீபத்தில் நீடிக்கப்பட்டது. இருப்பினும், சந்திரசேகரன் அந்த பதவியில் தொடர்வதை நோயல் டாடா விரும்பவில்லை. இதுவே இந்த மோதலுக்கு காரணமாகும்.

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீத பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸ், இப்போது நோயல் டாடா தலைமையில் செயல்பட்டு வருகிறது. டாடா டிரஸ்ட் கீழ் செயல்படும் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் (SDTT), ஆர்.டி. டாடா டிரஸ்ட் (RDTT) ஆகியவை தனித்தனியாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மேனாக சந்திரசேகரன் மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளன.

டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் 6 இயக்குநர்களிடம் இருந்து மொத்தம் ரூ.65 கோடி நஷ்டஈடு, ஆண்டுக்கு 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதில் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் ரூ.50 கோடியும், ஆர்.டி. டாடா டிரஸ்ட் ரூ.15 கோடியும் நஷ்டஈடாக கோரியுள்ளன.

பின்னணி

டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மேனாக என். சந்திரசேகரன் ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழுக் கூட்டத்தில், அவரை மேலும் 5 ஆண்டுகளுக்கு அதே பதவியில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த முடிவு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி செல்லாது என்பதே டாடா அறக்கட்டளைகளின் வாதம். டாடா சன்ஸ் நிறுவனத்தின் சங்க விதிகளில் உள்ள 121வது பிரிவின்படி, டாடா அறக்கட்டளைகள் நியமிக்கும் இயக்குநர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு இருந்தால் தான் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என அறக்கட்டளைகள் கூறுகின்றன.

வாதம் என்ன

டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் டாடா அறக்கட்டளைகள் சார்பில் நோயல் டாடா மற்றும் வேணு சீனிவாசன் ஆகிய இருவர் இடம்பெற்றுள்ளனர். செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சந்திரசேகரனின் மறுநியமனத்துக்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் வேணு சீனிவாசன் ஆதரவு அளித்தார். அதாவது இரு பக்கமும் தலா ஒரு வாக்கு என பிரிந்துள்ளன.

பெரும்பான்மை ஆதரவு என்றால் இரு இயக்குநர்களும் ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்து வாக்கு செலுத்தியதால் பெரும்பான்மை இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் சந்திரசேகரனின் மறுநியமனத்துக்கு தேவையான ஒப்புதல் கிடைக்கவில்லை என்று அறக்கட்டளைகள் கூறுகின்றன. செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும், இந்த தீர்மானம் முறைப்படி நிறைவேற்றப்படவில்லை என்றும் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்றும் டாடா டிரஸ்ட்ஸ் தெரிவித்திருந்தது.

பதில் இல்லை

இது தொடர்பாக டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று டாடா டிரஸ்ட் கூறுகிறது. அதை தொடர்ந்தே இரு அறக்கட்டளைகளும் தனித்தனியாக வழக்கு தொடர முடிவு செய்துள்ளன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் சங்க விதிகள், அறக்கட்டளைகள் நியமிக்கும் இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் ஆகியவைதான் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு நடுவே நவம்பர் 30ஆம் தேதி டாடா குழுமத்தின் கூட்டம் நடைபெறும் நிலையில், அதுவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *