வட கர்நாடகாவைத் தனி மாநிலமாகப் பிரிக்கும் கோரிக்கை, 5 முதல் 10 ஆண்டுகளில் நிஜமாகும் வாய்ப்பு உள்ளது என கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பாலச்சந்திர ஜர்கிஹொலிக் தெரிவித்திருக்கிறார். அரபாவ் தொகுதி எம்.எல்.ஏ-வான பாலசந்திர ஜார்கிஹோளி, மறைந்த முன்னாள் அமைச்சர் உமேஷ் கத்தி முன்வைத்த தனி மாநிலக் கோரிக்கை குறித்து நினைவு கூர்ந்து பேசினார். அப்போது, “தனி மாநிலம் உருவானால் பெலகாவி அதன் தலைநகராக மாறும். இப்பகுதி மகத்தான வளர்ச்சியைக் காணும் என உமேஷ் கத்தி அடிக்கடி கூறுவார். சில நேரங்களில் எங்களுக்கும் அது நல்ல யோசனையாகவே தோன்றியுள்ளது.

இப்பகுதி மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெலகாவி சுவர்ண விதான சௌதா கட்டப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு இங்கு வளர்ச்சி ஏற்படவில்லை. தனி மாநிலம் குறித்த அவரது கருத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். வட கர்நாடகாவின் பிரச்னைகளை பாஜக தீவிரமாகக் கையிலெடுக்கும். தனி மாநிலக் கோரிக்கை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயமாக நடக்கலாம்” என்றார்.
பெலகாவி பகுதியைக் கர்நாடகாவிலிருந்து பிரித்து மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கையை மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி (MES) அமைப்பு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.