சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன்- ஆதரவின்றி தவிக்கும் 4 பிள்ளைகள்! | husband killed wife and killed himself, 4 kids in trouble

Spread the love

கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (46), வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த ஹசீனா (38) ஆகிய இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியருக்கு அம்ரிதா சுரேஷ் (18), ஆனந்த் (17), ரோஷன் (11), அனயா (9) ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் திருவனந்தபுரம் நாலாஞ்சிறா உதியன்னூர் கோவில் அருகே கீர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் லீசுக்கு குடியிருந்து வந்தனர். சுரேஷ் குடும்பத்தில் அடிக்கடி சண்டையிட்டாலும், பிள்ளைகளைத் தவறாமல் பள்ளியில் கொண்டு போய் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

​ஹசீனாவிற்கு வேறொரு ஆண் நண்பருடன் பழக்கம் இருப்பதாகக் கூறி சுரேஷ் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், பிரச்னை முற்றியதால் ஹசீனா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை அவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினார். இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. ​

இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை மண்ணந்தலா காவல் நிலையத்தில் ஹசீனா புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் சுரேஷ் மற்றும் ஹசீனாவை அழைத்துச் சமரசம் பேசி இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், செவ்வாய்க்கிழமை இரவிலும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை சுமார் 4.30 மணியளவில், மேல் மாடியில் உள்ள படுக்கையறையில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்டியது.

அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவி ஹசீனாவின் கழுத்தை அறுத்த கொடூரமாகக் கொலை செய்தார். அந்த சமயத்தில் மாடிக்குச் சென்ற அவர்களது மூத்த மகள் அம்ரிதா கொலையை நேரில் பார்த்துள்ளார்.

ஹசீனா கொலை குறித்து போலீஸ் விசாரணை

ஹசீனா கொலை குறித்து போலீஸ் விசாரணை

ஹசீனாவின் மகள் அம்ரிதா சுரேஷ் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், ஹசீனாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​இதற்கிடையே, தப்பியோடிய சுரேஷ் தனது மூத்த மகள் அம்ரிதாவை தொலைபேசியில் அழைத்து, “அப்பா இனித் திரும்பி வரமாட்டேன், தம்பி, தங்கைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். அந்தச் சமயத்தில் அவர்கள் வீட்டில் இருந்த மண்ணந்தலா போலீஸார், அழைப்பு வந்த எண்ணிற்குத் திரும்ப அழைத்த நிலையில், தொடர்பு கொள்ள முடியவில்லை. ​

இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஹசீனாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டபோது, பிள்ளைகள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்ணீரில் மூழ்கடித்தது. தப்பியோடிய சுரேஷை கைதுசெய்ய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் டவர் இருப்பிடத்தை மையமாகக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சுரேஷின் மொபைல்போன் திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அவரது கார் பாலராமபுரம் ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர் ரயிலில் தமிழ்நாட்டுக்குச் சென்றதாக தெரியவந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் சிதம்பரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அதுகுறித்து கேரள போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அது சுரேஷ் என தெரியவந்தது. மனைவியை கொலைசெய்துவிட்டு சுரேஷ் தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *