சபரிமலையிலும், பம்பையிலும் நடிகர் மோகன்லாலின் சினிமா படப்பிடிப்புக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. “துடரும்’ என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகு மோகன்லாலும் தருண் மூர்த்தியும் இணையும் சினிமாவுக்கு ‘அதிமனோகரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சினிமாவின் படப்பிடிப்பு சபரிமலையிலும், பம்பாவிலும் நடைபெறுகிறது. சபரிமலை நடைப்பந்தல் வரை மட்டுமே படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்புக்காக வனத்துறை உட்பட 10-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அனுமதியை பெறவும் படக்குழுவினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தருண் மூர்த்தி இயக்க உள்ள இந்த சினிமாவில் லாவுலாஜன் என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நிகழும் கொந்தளிப்பான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் இந்த சினிமா மூலம் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

‘இஷ்க்’, ‘ஆலப்புழா ஜிம்கானா’ மற்றும் ‘மகாராணி’ போன்ற சினிமாக்கள் மூலம் கவனம் ஈர்த்த ரதீஷ் ரவி, இந்த சினிமாவுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் பேனரில் ஆஷிக் உஸ்மான் தயாரிக்கும் இத்திரைப்படம் பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுடன் மீரா ஜாஸ்மின் ஜோடி சேரும் இந்த சினிமா, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லாலு அலெக்ஸ், மனோஜ் கே.ஜெயன், ஜெகதீஷ், இர்ஷாத், சுதீஷ், உட்பட பலரும் இந்த சினிமாவில் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.