சபரிமலை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏஐ, ட்ரோன் தொழில்நுட்பம்; திருவிதாங்கூர் தேவஸ்வம் முடிவு!

Spread the love

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைச் சீராகக் கட்டுப்படுத்தவும், அடுத்த மண்டல காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI)  தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிரடி முடிவெடுத்துள்ளது. ​கொச்சியில் நடைபெற்ற திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உயர்நிலைக் கூட்டத்தில் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் மற்றும் ஏ.டி.ஜி.பி மனோஜ் ஆபிரகாம் ஆகியோர் இந்தத் திட்டத்தை இறுதி செய்துள்ளனர். ​கடந்த சில ஆண்டுகளாக மண்டலகால மகரவிளக்கு பூஜைகளின்போது சபரிமலையில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டன. கூட்ட நெரிசலை தவிர்க்க உயர் நீதிமன்றம் தலையிட்டு பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சபரிமலையின் முழுமையான பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் கூட்டத்தை கையாளும் விதமாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஹை-ரெசல்யூஷன் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சபரிமலையின் ஒட்டுமொத்தப் பகுதியும் ஜி.பி.எஸ் மேப்பிங் செய்யப்படும். அதன் மூலம் எந்தெந்த இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். ​நிலக்கல், பம்பா, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் மற்றும் சரங்குத்தி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் இனிவரும் மண்டல காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய முடியும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சபரிமலையில் ஏ.ஐ தொழில்நுட்பம்

சபரிமலையில் ஏ.ஐ தொழில்நுட்பம்

கூட்ட நெரிசல் ஏற்படும் பட்சத்தில், அது குறித்த உடனடித் தகவல்கள் காவல்துறையினருக்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். ​முகம் அங்கீகார தொழில்நுட்பம் மூலம் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைக் அடையாளம் காணவும் ஃபேஷியல் ரெக்கக்னிஷன் கேமராக்கள் பயன்படுத்தப்படும். ​நிலக்கல் மற்றும் பம்பா-வில் அமைக்கப்படும் டிஜிட்டல் திரைகள் மூலம், தரிசனத்திற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்ற விவரம் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும். வாகன நெரிசலைத் தவிர்க்க நிலக்கல்லில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி செய்யப்படும். வழித்தடங்களில் குப்பைகள் தேங்குதல், குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் மருத்துவ அவசரநிலைகளை ஏஐ தொழில்நுட்பம் தானாகவே கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *