சர்க்கரை நோய் இருக்கிறதே பலருக்குத் தெரியல.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! – Kumudam

Spread the love

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 8.98 கோடி பெரியவர்களில், 3.86 கோடி பேருக்கு (43 சதவீதம்) தங்களுக்கு அந்த நோய் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருவதாக சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு (IDF) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நவம்பர் 14-ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இந்தியா உட்பட ஆறு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

உலகளாவிய சுகாதார உத்திகள் (Global Health Strategies) அமைப்பு மூலம் 25 முதல் 64 வயதுக்குட்பட்ட 502 இந்தியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் ‘டைப்-2’ (Type 2) சர்க்கரை நோய் வருவதற்கான குறைந்தது இரண்டு ஆபத்துக் காரணிகள் இருந்தபோதிலும், 14 சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளதாக நம்புகின்றனர்.

ஆரோக்கியமாக உணர்ந்தாலும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என 84 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு அந்த அபாயம் இருப்பதைப் பலரும் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலேயே (Pre-diabetes) அறிகுறிகள் தென்படும் என 75 சதவீதம் பேர் தவறாக நினைக்கின்றனர். ஆறு நாடுகளில் இந்தியாவில்தான் இந்தத் தவறான புரிதல் அதிகமாக உள்ளது.

மேலும், சுமார் 48 சதவீதம் பேருக்குப் பரிசோதனைகளை ஏற்பாடு செய்து கொள்வதில் தயக்கம் உள்ளது. பரிசோதனை முடிவுகள் என்னவாக இருக்குமோ என்ற பயம் (35%), தங்களுக்கு ஆபத்து இல்லை என்ற எண்ணம் (25%), மருத்துவமனையில் நேரம் பெறுவதில் உள்ள சிரமம் (22%) ஆகியவை பரிசோதனை செய்துகொள்ள முக்கியத் தடைகளாக உள்ளன. இதோடு, மருத்துவரிடம் இது குறித்துப் பேசுவதில் உள்ள தயக்கம் (18%) மற்றும் மொழிப் பிரச்சினைகளையும் (12%) பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு 2030-க்குள் 80 சதவீத சர்க்கரை நோயாளிகளைக் கண்டறிய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்தியாவில் தற்போது 57 சதவீதம் பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இலக்கை அடைய 2030-க்குள் தினமும் சுமார் 13,700 பேருக்குப் புதியதாகப் பரிசோதனை செய்து கண்டறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை நோய் தொடர்பான மருத்துவச் செலவு 9.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பகுதி மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பார்வை இழப்பு போன்ற தீவிர பாதிப்புகளுக்கே செலவிடப்படுகிறது.

இது குறித்து ஐடிஎஃப் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத் தலைவர் டாக்டர் பன்ஷி சாபூ கூறுகையில், “மக்கள் தாமாக முன்வருவார்கள் எனக் காத்திருக்காமல், உள்ளூர் மருந்தகங்கள், மாலை மற்றும் வார இறுதி நேர கிளினிக்குகள் மூலமாகவும், மக்களின் தாய்மொழியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பரிசோதனையை எளிதாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை விட, தங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட ஆபத்து காரணிகளை மக்கள் உணர்ந்து பரிசோதனை செய்துகொள்வதே முக்கியம் என ஐடிஎஃப் தலைவர் பேராசிரியர் பீட்டர் ஸ்வார்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *