அம்பிகை என்றாலே சர்வமங் களங்களும் பொருந்தியவள் என்றுதான் அர்த்தம். அதனால்தான், தேவியை ஆராதிக்கும் சமயங்களிலும், சுபநிகழ்வுகளிலும் ‘சர்வமங்கள மாங்கல்யே சிவே’ என்ற துதி, மங்களகரமாக ஓதப்படுகிறது. சர்வ மங்களையான அம்பிகை அதையே தனது திருப்பெயராகக்கொண்டு அருள்பாலிக்கும் தலம் சென்னை நங்கநல்லூரில் இருக்கிறது. அங்கே இறைவன் தர்மலிங்கேஸ்வரராக இறைவியுடன் அருள் பாலிக்கிறார்.
சுமார் ஆயிரம் வருடங் களைக் கடந்த சோழர் காலத்திற்கு முற்பட்ட இக்கோயிலின் புராதனப் பெயர் தன்மீச்வரம். இறைவன் தர்மலிங்கேஸ்வரருக்கு தன்மீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் சக்தி வடிவமான அம்பாள் சர்வ மங்களா தேவி கருவறையில் மிகப் பிரகாசமான திருவினளாகக் காட்சி யளிக்கிறாள். தென்திசை நோக்கியிருப்பதால், இவளை வணங்கினால் யமபயம் நீங்கும் என்பது ஐதிகம். சர்வ மங்களா எனும் திருநாமம், லலிதா சகஸ்ர நாமத்தில் இருநூறாவதாக இடம் பெற்றுள்ளது. மதுரை மீனாட்சியைப் போன்று அம்பிகையின் ஆட்சியே இங்கு நடக்கிறதென்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாலயமானது செம்பொன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் அருளும் இறைவனின் திருவிளையாடலாக தலபுராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. சோழச் சக்கரவர்த்தி ராஜராஜன் தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த போது காரியாதித்த சோழன், குறுநில மன்னனாக இருந்தான். சிவபக்தனான அவன், தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள கோயில்களில் உழவாரப்பணி செய்துவந்தான். ஒரு முறை இவன் தன்மீச்வரம் வந்தபோது, அந்தப் பகுதி முழுக்க வயல்வெளிகள் நிறைந்து பசுமையாகக் காட்சி தந்ததைப் பார்த்து மகிழ்ந்தான். எனவே அன்றிரவு அங்கேயே தங்கினான்.
இரவு முடிந்து விடிந்தது. பொதுவாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் அரசன், அன்று விடிந்து வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் வீரர்கள் குழம்பினர். அதோடு, அரசனை நெருங்கிச் சென்று அழைத்து எழுப்பவும் பயந்தனர். என்ன செய்வதெனப் புரியாமல் அவர்கள் தவித்த சமயத்தில், எங்கிருந்தோ கோயில்மணி ஓசை மிகுந்த சத்தத்துடன் கேட்டது. அந்த ஒலியினால் தட்டி எழுப்பப்பட்டவன்போல் விழித்து எழுந்தான் மன்னன். எங்கே இருந்து கோயில்மணி ஓசை வந்தது என்று அந்த திசை நோக்கினான். அங்கே சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்தார். மகிழ்ந்த மன்னன், அங்கே கோயில் இருக்கவேண்டும் எனத் தீர்மானித்துச் சென்றான்.
அவன் நினைத்ததுபோலவே அங்கே கோயில் இருந்தது. ஆனால், அதன் நிலையைக் கண்டு அதிர்ந்தான் மன்னன். கோயில் மிகவும் சிதைந்து, நித்ய பூஜைக்கே வழியின்றி இருந்தது. இங்கிருந்து எப்படி மணி ஓசை எழுந்திருக்கும்? என நினைத்த மன்னன், ஈசனே மணி ஓசையினை எழுப்பி, தனக்குத் திருப்பணி செய்யும் வாய்ப்பினை அளித்திருப்பதை உணர்ந்தான்.
உடனே கோயில் திருப்பணிக்காகவும், பூஜை நேரங்களில் இசைக் கருவிகள் முழங்குவதற்கும், அத்தலத்தின் அருகே உள்ள நிலங்களின் வருமானத்தை வழங்க முடிவுசெய்தான். சந்திர சூரியர்கள் உள்ளவரை அக் கோயிலில் சிவப் பணி தொடர்வதற்காக அந்த நிலங்களை அளிப்பதாகக் கோயில் கல்வெட்டுகளில் பொறித்தான் என்கிறது, தலபுராணம்.
எழிலான ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி, கடந்து கருவறை உள்ளது. மூலஸ்தானத்தில் இறைவன் லிங்கத் திருவினராக அருள் பாலிக்கிறார். அம்பிகை சர்வ மங்களா தேவி, தனிச் சன்னதியில் சற்று சாய்ந்த நிலையில் நளினமாக நின்ற திருக்கோலத்தில் அருள்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சர்வ மங்களத்தையும் வாரி வழங்கி ஆசிர்வதிப்பவள், இவள். பிராகாரத்தில் உள்ள விநாயகரின் பெயர் தன்வீச விநாயகர் இறைவனின் கருவறையைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கிறார். நால்வர், பைரவர், நவகிரகங்கள், அகோர வீரபத்திரர், முருகன் வள்ளி தேவசேனா உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது. தல விருட்சம் வில்வம். கோயில் வளாகத்தில் அரசும் வேம்பும் உள்ள மரத்தடியில் பிள்ளையாருடன் இரு நாகர்களும் உள்ளனர்..
இக்கோயிலில் வடிக் கப்பட்டுள்ள சுதைச் சிற்பங் களும், மேற் கூரையின் மீது வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களும் பார்ப் பவர்களின் கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிக் கின்றன. தலபுராணக் கதையும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. திருமணத் தடை நீங்கிட, குழந்தை பாக்கியம் கிட்டிட, கல்வியில் சிறந்து விளங்க, சகல மங்களங்களும் கைகூடிவர இத்தலம் வந்து தர்மலிங்கேஸ்வரரையும், சர்வமங்களா தேவியையும் வணங்குகிறார்கள் பக்தர்கள். அவர்களின் வேண்டுதல் ஈடேறியதும், நேர்த்திக்கடனாக சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்வித்து வஸ்திரம் அணிவிக்கிறார்கள்.
மாதம்தோறும் இரண்டாம் ஞாயிறுகளில் ஏகாதச ருத்ர ஹோமம் விசேஷமாக நடத்தப்படுகிறது. பிரமோத்ஸவம், பவித்ரோத்ஸவம், சண்டி ஹோமம், மஹாசிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஸ்கந்த சஷ்டி உள்ளிட்டவை கொண்டாடப்படுகின்றன. வாழ்வில் சர்வ மங்களகரமான, நன்மைகளையும் பெற, நீங்களும் ஒருமுறை இத்தலம் சென்று வணங்கி வாருங்களேன்.

