1971-ல் பூமணியின் முதல் சிறுகதையான ‘அறுப்பு’, தாமரை இதழில் வெளியானது. கரிசல் மண்ணின் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், உழைப்பாளர்களின் உழைப்பு, சாதி அமைப்பின் யதார்த்தங்கள் ஆகியவற்றை எவ்விதப் புனைவும் இன்றி மிக நுட்பமாகத் தனது படைப்புகளில் பதிவு செய்தவர் பூமணி.
வெக்கை, பிறகு, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி, கொம்மை போன்ற நாவல்களும், வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் போன்ற சிறுகதை தொகுப்பும் இவரின் இலக்கியப் பங்களிப்பாகும்.
எழுத்தோடு நின்றுவிடாமல் திரைத்துறையிலும் தடம் பதித்தார் பூமணி. தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக (NFDC) இவர் இயக்கிய “கருவேலம்பூக்கள்’ திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது.
அதேபோல், இவருடைய புகழ்பெற்ற நாவலான ‘வெக்கை’ இந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது.
இத்திரைப்படத்தின் மூலம் பூமணியின் எழுத்துகள் புதிய தலைமுறை வாசகர்களிடமும் பரவலாகச் சென்றடைந்தன.