சாமி வரம் கொடுத்தும், பூசாரி வரம் கொடுக்காத மாதிரி வீடு அரசாங்கம் எங்களுக்கு கட்டிக் கொடுத்தும், மின்சார வசதி செய்து கொடுக்காமல் அம்போன்னு விட்டுட்டாங்க. மூணு வருஷமா கோரிக்கை வைக்கிறோம். புது அரசு வந்தும் யாருமே கண்டுக்கலை” என்று கண்ணீரோடு கதறுகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.கொத்தூர் கிராம இருளர் மக்கள்.
வேப்பனப்பள்ளியிலிருந்து கொங்கணப்பள்ளி போகும் வழியில் 4 கி.மீ தொலைவில் உள்ளது கே.கொத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் இருளர் இன மக்கள் 60 குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறார்கள். குடிசை வீடுகளில் வாழும் இவர்களின் நிலையை அறிந்து 2021 ஆண்டில் 22 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டிக் கொடுக்க சொல்லி நிதி ஒதுக்கியது அப்போதைய தி.மு.க. அரசு. இதோ, அதோ என்று இழுத்தடித்த நிலையில் அதன் கட்டுமானப் பணி 2023ல் முடிந்திருக்கிறது. ஆனால், வீட்டை மட்டும் கட்டிக் கொடுத்துவிட்டு மின்சார வசதி செய்யாமல் விட்டுவிட்டார்கள். இதனால், வீடிருந்தும் மின்சார வசதி இல்லாமல் இருள் சூழ்ந்த சூழலில் குழந்தைகளை வைத்துகொண்டு தவிக்கிறார்கள் இருளர்கள்.
உள்ளூர் தன்னார்வலர்கள் சிலரிடம் பேசினோம். “பழங்குடியின மக்களில் மிகவும் பின்தங்கிய நிலையில இருக்கிறவங்க இருளர்கள்தான். படிப்பறிவு பெருசா இல்லாம கூலி வேலைக்குத்தான் அவங்க போறாங்க. பெங்களூர்ல காபி தோட்டம், கோலார் பக்கம் இருக்கிற மாங்காய் தோட்டத்துக்கு குடும்பம், குடும்பமாகப் போய் வேலை பார்ப்பாங்க. இப்படிப்பட்டவங்கதான் கே.கொத்தூர்ங்கிற இடத்துல 60 குடும்பத்துக்கு மேல இருக்காங்க. கூரை வீட்டில் இருந்த இவங்க, அரசாங்கத்துக்கு கோரிக்கை வெச்சதுல 22 பேருக்கு பசுமை வீடு கட்டித் தரச்சொல்லி 2021-22ல் அரசின் ஒப்புதல் வந்துச்சு.
இந்த வீடுகளை மொத்தமா கட்டி தர்றதுக்கு ஒருத்தரே டெண்டர் எடுத்தாரு. ஆனால், அவர் பாதி வேலைகளை முடிச்சுட்டு, முழுசா செய்யாம விட்டிருந்தாரு. மக்கள் எல்லாம் கலெக்டருக்கு புகார் கொடுக்கவும், டெண்டர் எடுத்தவரு திரும்ப வந்து ஒருவழியா 2023ல் வேலைகளை முடிச்சுக் கொடுத்தாரு. இருளர்களுக்கு இலவச மின்சார வசதியோடத்தான் வீடுகளை ஒப்படைக்கணும். ஆனா, டெண்டர் எடுத்தவர் அப்படி எதையும் செஞ்சுக் கொடுக்கல. பி.டி.ஓ. ஆபிஸ்ல போய் கேட்டா, ‘காசை எடுத்துட்டு போய்ட்டாங்க இப்ப என்ன செய்யறது?னு கையை விரிச்சுட்டாங்க.
நியாயமா, அவங்களுக்கு சிங்கிள் பேஸ் மின்சாரமா இலவச மின்சாரம் கொடுக்கனும். அது மூலமா வீட்டுக்கு ஒரு லைட் மட்டும் எரியிற வசதி இருக்கும். இப்ப அதையும் கொடுக்காம ஏப்பம் விட்டுட்டாங்க. மக்கள் ஈ.பி. ஆபிஸ்ல போய் கேட்டா, ‘மீட்டருக்கு 6,000 ரூபாய் பணத்தை கட்டு மின்சாரம் தர்றோம்’னு சொல்றாங்க. இருளர்கள் கையில பெருசா பணப்புழக்கம் இருக்காது. 6,000 ரூபாய்க்கு அவங்க எங்க போவாங்க. இதெல்லாம் சொல்லி அதிகாரிகள்கிட்ட கெஞ்சியும் பார்த்துட்டாங்க. மூணு வருஷமா ஒண்ணுமே செய்யல. விஜய் அரசாவது இருளர்கள் பிரச்னையை தீர்த்து வைக்கணும். அவங்களுக்கு வழக்கமாக கொடுக்கிற இலவச மின்சாரத்தை கொடுத்து முதல்வர் விஜய் அவங்க வாழக்கையில ஒளி ஏத்தி வைக்கணும்” என்றார்கள்.
மின்சாரம் இல்லாமல் தவிக்கும் ரவி நம்மிடம், “மீட்டருக்கு 6,000 ரூபாய் பணம் கேட்குறாங்க. நாங்க பார்க்குற தோட்ட வேலை, மரம் அறுக்கிற வேலையில எங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைச்சிடப் போகுது. அதுக்கப்புறம் ஒவ்வொரு மாசமும் கரன்ட் பில்லும் கட்டணும் எங்களுக்கு அது பெரிய சுமை. மூணு வருஷமா ஈபி ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ்ஸுனு அலையறோம். யாருமே ஏறெடுத்துப் பாக்கல. முதல்வர் விஜய்தான் எங்களுக்கு உதவணும்” என்றனர்.
இருள் சூழ்ந்த வீட்டில் வசித்து வரும் தனலட்சுமி அன்றாட துயரங்களைக் கொட்டினார், “கரன்ட் இல்லாம குழந்தைங்க படிக்க முடியல. ராத்திரியில சமைக்க முடியல. பாம்பு, பூச்சி வீட்டுக்குள்ள வருது. சாயங்காலம் ஆறு மணிக்குமேல யாருமே வீட்டைவிட்டு வெளியே வர முடியாது. இந்த நவீன காலத்திலயும் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? கரன்ட் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறோம். கரன்ட் இல்லாததால 22 வீட்டுல 10 வீட்டுல மட்டும்தான் இப்போ ஆளுங்க இருக்குறாங்க. தண்ணீர் வசதியும் எங்களுக்கு இல்லை. தண்ணீருக்கு குடத்தைத் தூக்கிக்கிட்டுதான் அலையணும். அரசாங்கம்தான் பெரிய மனசு பண்ணி எங்களுக்கு இலவச கரன்ட் கொடுக்கணும்” என கோரிக்கை வைத்தார்.
அதிகாரிகளிடம் மின்வாரிய விசாரித்தோம், ‘பசுமை வீடுகள் திட்டத்தில்தான் அரசு வீடுகள் கட்டி கொடுத்திருக்கிறது. அதற்கு எப்படி இலவச மின்சாரம் கொடுப்பது? இலவச மின்சாரம் என்பது ஒரு அறை கொண்ட கூரை வீட்டுக்கு கொடுப்போம். அதில் ஒரு லைட் மட்டும்தான் எரியும். மூன்று அறை கொண்ட வீட்டுக்கு எப்படி கொடுப்பது? அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும்” என்றார்கள்.
வேப்பனஹள்ளி தொகுதி திமு.க சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசனிடம் பேசினோம். தண்ணீர் பிரச்னை, மின்சார பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். விரைவில் அந்த மக்களின் துயரம் போக்கப்படும்” என்றார்.
மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் கவனத்துக்கு…

