`சாப்பாட்டுக்கே வழியில்லை ஐயா..' கலெக்டர் ஆபீஸ் வாசலில் கலங்கிய முதிய தம்பதி; உதவிய மனிதநேயர்கள்

Spread the love

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் ஊன்றுகோலுடன் தள்ளாடியபடி நடந்து வந்த முதிய தம்பதியின் காட்சி, அங்கே நின்ற அனைவரின் நெஞ்சையும் பிழிந்தது.

குன்றக்குடியைச் சேர்ந்த அன்னக்களஞ்சியம் – தனலட்சுமி தம்பதியருக்கு பெற்ற பிள்ளைகள் இருந்தும், முதுமையின் தனிமையில் வறுமையோடு போராடி வருகின்றனர்.

அரசு வழங்கும் மாதாந்திர முதியோர் உதவித்தொகையை நம்பியே இவர்களின் அன்றாட சாப்பாடும் மருத்துவச் செலவுகளும் கழிந்து வருகின்றன.

ரூ.200 கடன் வாங்கிப் பயணம்:

கடந்த இரண்டு மாதங்களாக இவர்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை சரிவர வரவு வைக்கப்படவில்லை. இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கணவரைக் கூட்டிக்கொண்டு, தங்களின் நியாயமான உரிமையைக் கேட்க ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டார் பாட்டி தனலட்சுமி.

பயணக் கட்டணத்திற்குக்கூடப் பணமில்லாமல், அக்கம் பக்கத்தினரிடம் ரூ.200 கடன் வாங்கி வந்ததாகக் கூறி பாட்டி அளித்த உருக்கமான வாக்குமூலம் அங்கே இருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

பாட்டி கூறிய வேதனை வார்த்தைகள்:

“ஐயா, ரெண்டு மாசமா பணம் லேட்டா வந்தது. இந்த மாசத்துக்கு அதுவும் வரல. ரொம்ப முடயாமல் இருக்கு. அவருக்கு உடம்பு சரி இல்லாம ஆஸ்பத்திரில இருந்து பெட்ல இருந்து கூட்டிட்டு வந்தேன். இப்ப சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. ஒருத்தர்கிட்ட 200 ரூபாய் கடன் வாங்கித்தான் கலெக்டர் ஆபீஸ்க்கு வந்தேன். கலெக்டர் ஐயாதான் ஏதாவது உதவி செய்யணும்.

மாசம் அஞ்சாம் தேதி போல பணம் வரும். அதுவும் வரல, தேதி ஆயிடுச்சு.

ஒரு ஆளுக்கு 1,200 ரூபாய் வரும். அதுவும் இப்ப நாலு மாசமாத்தான்… அதுக்கு முன்னாடி 1,000 ரூபாய்தான். 200 ரூபாய் கூட்டிப்போடுறோம்னு சொன்னாங்க. சரி வந்துச்சுன்னா செலவுக்கு, சாப்பாட்டுக்கு ஏதாவது வச்சுக்குவோம்… உடம்பு சரி இல்லாம இருக்குற ஐயாவுக்கு உதவியா இருக்கும்னு அப்படின்னு பார்த்தா பணம் வரல.

இப்ப நாங்க சிவகங்கை ஆஸ்பத்திரில இருந்து வர்றோம்… கலெக்டர் ஐயாவைப் பாக்க முடியல… இப்படி ஒவ்வொரு வாரமும் வந்து வந்து ஆஸ்பத்திரில இருந்து கலெக்டர் ஐயாவ பாத்துட்டு போக வருவோம்… இன்னைக்கும் கலெக்டர் ஐயாவ பாத்துட்டு போவோம் அப்படின்றதுக்காக வந்தேன்..எங்களுக்கு அந்த கலெக்டர் ஐயாதான் உதவி பண்ணனும்..” என்று தனலெட்சுமி பாட்டி கண்ணீர்மல்க அளித்த வீடியோ பேட்டி ஊடகங்களிலும் மூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.

பாட்டியின் இந்தக் கண்ணீர்ப் பேட்டி இணையத்தில் வீடியோவாகப் பரவி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் மனசாட்சியையும் உலுக்கியது. செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே விழித்துக்கொண்ட அரசு அதிகாரிகள், நிலுவையில் இருந்த உதவித்தொகையை உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் முதியவர்கள் வீதிக்கு வந்தாலும், செய்தி அறிந்து ஓடோடி வந்த மனிதநேய உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டின.

திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.50,000 நேரடியாக அவர்களின் கணக்கிற்கு அனுப்பப்பட்டதுடன், திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்களும் நேரில் சென்று உதவ முன்வந்துள்ளனர்.

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு தரப்பில் இருந்தும் அத்தம்பதியைத் தொடர்புகொண்டு, அவர்களின் தற்போதைய தேவைகளைக் கேட்டறிந்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேவகோட்டையில் உள்ள இளைய மகனின் வீட்டில் தங்கியிருக்கும் இத்தம்பதியினர், தங்களின் அவல நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஊடகங்களுக்கும், கரம் நீட்டிய நல்நெஞ்சங்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *