மிக நீண்ட தமிழ் சினிமா வரலாற்றில் பகுத்தறிவு, பெண்ணுரிமை, வர்க்கப்போராட்டம், கம்யூனிச சிந்தனைகள், தலித்திய சிந்தனைகள் என்று எத்தனையோ சமூக அரசியல் கருத்துகள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கோலோச்சிய திராவிடச் சிந்தனைகளையும், திராவிட இயக்கங்களையும் பற்றிப் பேசிய படங்கள் மிக குறைவுதான். இந்தப் படம் அந்த குறையைப் போக்கிவிட்டது என்று சொல்லமுடியாது, ஆயினும் ஓரங்கமாகத் தொட்டுச் சென்றது எனலாம். ரங்கன் வாத்தியார்களின் நெஞ்சுரத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் கழகக் களவீரர்களிடம் இன்றும் காணமுடியும்.
குத்துச் சண்டைக் குழுக்களிடையே விளையாட்டுகள், போட்டி மனப்பான்மையையும் தாண்டி கௌரவப் பிரச்சினையாக, ஒரு போதையாக மாறி நிற்கிறது. அரசியல் கட்சிகள் அந்தந்தப் பகுதி மக்களிடையே தங்களின் அடையாளங்களாக, இன்ஃப்ளூயன்சர்களாக குத்துச்சண்டை வீரர்களை முன்னிறுத்த முயலுகின்றன. வீரர்களை நைச்சியமாகப் பேசி சமூகவிரோதக் காரியங்களில் ஈடுபடுத்துகிற சிக்கல்களும் நிலவுகின்றன. அதில் கொல்லுதலும், கொல்லப்படுதலும் நடக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, சாதிப் பாகுபாடும் பார்வைக்குப் புலப்படாத மலையளவு வளர்ந்து நிற்கிறது. சக சாதி வீரனிடம் தோற்பதை ஏற்றுக்கொள்ள முடிகிற ஒருவனால், ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வரும் ஒரு வீரனிடம் தோற்பதை ஏற்கமுடியவில்லை. இறுதியில் அவர்களின் வழக்கமான ஆயுதங்களைத் தூக்குகிறார்கள். ஆடையை உருவி அவமானப்படுத்தும் கொடூரமெல்லாம் நிகழ்கிறது. சாதிய வன்மத்தின் வீரமென்பது இவ்வளவு இழிவானதாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது.

மனமொடிந்து போகும் கபிலன் எதிலும் ஈடுபாடின்றிப் போகிறான். குத்துச்சண்டைதான் அவனுடைய அடையாளம். அவனுக்குள் இருந்த தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அந்த விளையாட்டின் வழியாகத்தான் வெளிப்பட்டன. குத்துச்சண்டையின் ஆதாரமான உடலையே சாராயத்துக்கு முன்னால் கைவிடுகிறான். உடலையே இழந்த பிறகு, வாழ்க்கையின் மீதான பிடிப்பையும் இழக்கிறான் அவன். அவமானம் அவனைச் சண்டை வளையத்துக்கு வெளியே மட்டுமல்ல, அவனுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தும் வெளியே தள்ளிவிடுகிறது. பெற்ற தாயைத் தாக்க முயலுகிறான். கட்டிய மனைவியையும் பிள்ளையையும் கைவிடுகிறான். இந்தப் படத்தின் நாயகனான கபிலன் ஆசானாலும், அம்மையாலும், அகம் கொண்டவளாலும் இறுதியில் மீட்கப்பட்டுவிடுகிறான். ஆனால், நிஜத்தில் எத்தனைக் கபிலன்கள் மீளமுடியாமலேயே அழிந்து போனார்களோ எனும் நினைப்புதான் துயர் தருகிறது.
இறுதி ஆட்டம் நடக்கிறது. கபிலனின் நாக்-அவுட் குத்தில் வேம்புலி வீழ்ந்ததும் தனது அடிபட்ட இடக்கையைக் கபிலன் தொடுவது போன்றொரு காட்சித்துண்டு வருகிறது. அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் நடந்த உலகப் புகழ்பெற்ற போட்டி ஒன்றின், முதல் சுற்றிலேயே சோனி லிஸ்டனை, முகமது அலி நாக்-அவுட் செய்த போது ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. விளையாட்டு உலக வரலாற்றிலேயே மிகச் சிறந்த புகைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அந்தப் புகைப்படத்தை நினைவூட்டும் வண்ணம் கபிலனின் அந்த இறுதி வெற்றித் தருணம் படமாக்கப்பட்டிருந்தது. அலி மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரர், ஆயினும் அவர் அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்காகவே எப்போதும் நினைவுகூரப்படுகிறார். போலவே சார்பட்டாவின் கபிலனும் அவனது அரசியலுக்காகவே நினைவுகூரப்படுவான்.!