Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தினேஷ் கார்த்திக் மிகப் பொருத்தமான நபராக இருப்பார் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பயிற்சியாளர்களை விடவும், சிஎஸ்கே போன்ற மிகப்பெரிய அணிக்கு உள்ளூரை சேர்ந்த பயிற்சியாளர் சரியான தேர்வாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் இருக்கிறது. 18 ஆண்டுகளாக ஸ்டீபன் ஃபிளமிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சூழலில், தற்போது அவர் பதவி விலகி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் தோனியை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று விவாதித்து வருகின்றனர்.

ஆனால் சிஎஸ்கே அணியின் தேர்வு மீண்டும் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளராகவே இருக்கிறது. அதனை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனும் உறுதி செய்துள்ளார். பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளையும் தோனியே மேற்கொண்டு வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன. செப்டம்பர் மாதத்தில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் தொடர்பான விவாதத்தில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் மேத்யூ ஹெய்டனின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில் மேத்யூ ஹெய்டன் பேசுகையில், சிஎஸ்கே அணி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வரும் நபரில் சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். ஃபிளமிங் மிகச்சிறப்பாக தோனியுடன் இணைந்து சிஎஸ்கே அணியை பயணிக்க வைத்தார்.
அவர்கள் தான் சிஎஸ்கே அணி இன்ஜினாக இருந்தனர். பயிற்சியாளர்கள் பரிந்துரை பெயர்களில் ஒரு பெயர் அடிக்கடி தென்படுகிறது. அது தினேஷ் கார்த்திக் பெயர் தான். எனக்கு தெரிந்த வரை தினேஷ் கார்த்திக் அந்த பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டார். சிஎஸ்கே அணிக்கும் ஒரு உள்ளூர் பயிற்சியாளர் தேவை. பலரும் வெளிநாட்டு பயிற்சியாளரையே கூறுவார்கள்.
ஆனால் சிஎஸ்கே போன்ற மாபெரும் அணியை சமாளிக்க உள்ளூர் பயிற்சியாளர் அவசியம். மற்ற பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்களை வெளிநாடுகளில் இருந்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். நிச்சயமாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக யார் வருவார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

